தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் தனபால் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக வாய்மொழியாக அறிவித்திருக்கிறது திமுக. இதனால் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜூலை 1-ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என தெரிகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் மீது பதவி நீக்கத் தீர்மானத்தை கடந்த மே 1-ம் தேதி திமுக கொடுத்தது. நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக அமோக வெற்றியை எதிர்பார்த்திருந்த நேரம் அது! தேர்தல் முடிந்ததும், கூடுகிற சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்துவிடலாம் என்கிற திட்டமிடல் அப்போது இருந்தது.
ஆனால் 22 தொகுதி இடைத்தேர்தலில் 9 இடங்களை அதிமுக வென்றுவிட்டது. இதை திமுக எதிர்பார்க்கவில்லை. இதன் மூலமாக சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை வலுவாக்கிக் கொண்டிருக்கிறது அதிமுக. தவிர, நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக படு தோல்வியை தழுவியதால், அந்தக் கட்சியின் ‘ஸ்லீப்பர் செல்’களாக இருந்த சில எம்.எல்.ஏ.க்களும் இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டார்கள். இது அதிமுக அரசுக்கு இன்னும் பலம்!
இந்தச் சூழலில் சட்டமன்றம் இன்று (ஜூன் 28) கூடியது. அலுவல் ஆய்வுக் குழுவில் வருகிற ஜூலை 1-ம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுத்துக் கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அந்தத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் தோல்வியைத் தழுவுவதில் திமுக.வுக்கு உடன்பாடில்லை.
எனவே சபாநாயகர் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை வலியுறுத்த விரும்பவில்லை என்றும் அதை வாபஸ் பெறுவதாகவும் வாய்மொழியாக திமுக தரப்பில் சட்டமன்றச் செயலகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘அன்றைய சூழலில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தோம். இப்போது அதை வலியுறுத்த விரும்பவில்லை’ என கூறியிருக்கிறார்.
ஆனாலும் அலுவல் ஆய்வுக் குழுவில் எடுத்த முடிவின்படி நிகழ்ச்சி நிரலில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே அதை எடுப்பதா, வேண்டாமா? என்பது குறித்து சட்டமன்றச் செயலகம், துணை சபாநாயகர் ஆகியோர் முடிவெடுப்பார்கள் எனத் தெரிகிறது.