திமுக தலைவராக பதவியேற்கும் ஸ்டாலின் : திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார். நாளை நடைபெறும் பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த ஆக.7ம் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார்.
அதனைத் தொடர்ந்து, திமுகவின் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், நாளை (ஆக.28) திமுக பொதுக்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த கூட்டத்தில் தணிக்கை குழு அறிக்கை, திமுக தலைவர் பதவி மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடும் மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் துரைமுருகனும் நேற்று (ஆக.26) வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் 65 மாவட்டத்தில் இருக்கிற மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் வேட்புமனுவை பூர்த்தி செய்து வழங்கினர்.
அதேபோல, புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களும் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் விண்ணப்பங்களை தாக்கல் செய்தனர்.
மேலும், பொருளாளர் பொறுப்புக்கு துரைமுருகன் பெயரை மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர்.
வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வாகும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில், நாளை நடைபெறும் பொதுக்குழுவில் இவர்கள் தேர்வானது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாக உள்ளதை தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.