தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக அரசின் சார்பில் புதன்கிழமை (05.03.2025) நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 183 கட்சிகள் உள்ளன. இதில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு மட்டுமே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், தொகுதி சீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் கூட்டப்படவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
நாகையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) மாவட்ட நிர்வாகம் சார்பில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
அப்போது, “தமிழகத்தின் உணர்வை ஒற்றுமையோடு வெளிப்படுத்த மார்ச் 5-ம் தேதி, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள் கலந்து கொள்வதாக கூறியுள்ளன. ஒருசில கட்சிகள் கலந்துகொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளன. இது தனிப்பட்ட தி.மு.க-வுக்கான பிரச்சினை இல்லை. தமிழகத்தின் உரிமை. கட்சிகள் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஓரமாக வைத்து சுய நலத்துக்காக, நம்முடைய சந்ததிகளை அடகு வைக்காமல் நல்ல முடிவு எடுத்து, தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வாருங்கள்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (05.03.2025) நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் பங்கேற்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம், தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அரசின் சார்பில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்க உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.