தென்காசியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில் மூலம் பயணம் மேற்கொண்டார். கருணாநிதி பெரும்பாலும் வெளியூர் பயணங்களுக்கு ரயிலையே தேர்வு செய்வார். அதே பாணியை ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார்.
தென்காசியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தென்காசிக்கு முதல்முறையாக நேற்று இரவு (07.12.2022) ரயில் பயணம் மேற்கொண்டார்.
முதலமைச்சராக பதவியேற்றபிறகு, முதல்முறையாக தென்காசி மாவட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். பல்வேறு மாவட்டங்களுக்கும் விமானம் மூலம் சென்ற மு.க.ஸ்டாலின், முதல்முறையாக ரயிலில் பயணம் செய்தார். சென்னை எழும்பூரிலிருந்து நேற்று இரவு 8.40 மணிக்கு பொதிகை விரைவு ரயிலில் பயணம் செய்து தென்காசிக்கு சென்றார்.
குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில், இன்று காலை சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் மதுரை சென்று அங்கே இரவு தங்குகிறார்.
நாளை மறுதினம் (09.12.2022) காலையில் மதுரை மாநகராட்சி வளைவு மற்றும் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர், விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
கடந்த காலங்களில் திமுக தலைவராக இருந்த கலைஞர், ரயில் பயணங்களை அதிகம் விரும்புவார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கட்சி ரீதியாக செல்லும் சுற்று பயணங்களாக இருந்தாலும் சரி, முதல்வராக இருந்த போது அரசு பயணமாக சென்றாலும் சரி, ரயிலில் செல்வதையே அதிகம் விரும்புவார். அதற்கு காரணம், மக்களோடு மக்களாக பயணம் செய்தால்தான் அவர்களோடு ஒரு பாசப் பினைப்பு இருக்கும் என்று கலைஞர் குறிப்பிடுவார். இப்போது அதே பாணியை ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் பயணத்தை தேர்வு செய்திருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை வரவழைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“