எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா: எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், கனிமொழி ஆகியோருக்கும் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன் விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.
சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகிக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் உருவப்படத்தை திறந்து வைத்து நூற்றாண்டு விழா மலரையும் வெளியிடுகிறார்.
இவ்விழாவில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பட்டியலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருப்பது அரசியல் ஆர்வலர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருணாநிதி - ஜெயலலிதா இருந்த வரை, மறந்தும் கூட இரு கட்சியினரும் எதிர்க்கட்சியினரின் வீட்டு விசேஷத்திற்குக் கூட செல்ல மாட்டார்கள். அழைக்கவும் மாட்டார்கள். வெறுப்பு அரசியலே நிலவியது. ஆனால், ஜெயலலிதா இறந்த பின்னர் இந்த இறுக்கம் சற்று குறைந்தது.
பின்னர், கருணாநிதி இறந்த போது, மீண்டும் இரு கட்சியினரும் வெறுப்பு அரசியலை கருத்துகள் மூலம் வெளியிட்டு மோதிக் கொண்டனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், ஸ்டாலின், தினகரன், கனிமொழிக்கும் அழைப்பு விடுத்துள்ளது அதிமுக அரசு.
ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அந்தந்த மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்ற அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயர் இடம் பெற்றிருக்கிறது.
டிடிவி தினகரனை அழைத்துள்ள தமிழக அரசு
தினகரனை இ.பி.எஸ் , ஓ.பி.எஸ் மிகக் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், அவரும் அவ்விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனால், அனைவரும் எப்படி ஒரே மேடையில் அமர்வார்கள் என்பது அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இருப்பினும், டிடிவி தினகரனுக்கு அங்கீகாரம் கொடுப்பதுபோல் கொடுத்து, கடைசியில் மாவட்டச் செயலாளர்களுக்கு கீழே அவர் பெயரை அழைப்பிதழில் போடப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழ்
இதன் காரணமாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? என்பது தெரியவில்லை.
ஆளும் பழனிசாமி அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை ஒதுக்கிவைத்து விட்டு, அரசு விழாவிற்கு எதிர்க்கட்சிகளையும் அழைத்திருக்கிறது.
இதை ஏற்று, அவர்கள் பங்கேற்கும் பட்சத்தில், அது ஆரோக்யமான அரசியலாக பார்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.