மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரமாக விளங்குவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமையும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக அதிமுக தெரிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து, மக்கள் விழிப்புணர்வு என்ற அமைப்பைச் சேர்ந்த ஹக்கீம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதிமுக அரசுக்கு எதிராக மு.க. ஸ்டாலின் டுவீட் :
அதற்கு மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள பதிலில் தமிழகத்தில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக இதுவரை மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழு ஒப்புதல் தரவில்லை என்றும், இதற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.
இதனை டுவிட்டரில் பதிவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு 2 ,000 கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், கட்டுமான பணிகள்தான் தொடங்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் இவை அனைத்தையும் பொய் என்பதை உறுதி படுத்தியுள்ளதாகவும் மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம்” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.