தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு என்று டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையை அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பாமகவினர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியது. தமிழகத்தில் கோரோனா வைரஸால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தமிழக அரசு நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு; 8000 பேருக்கு பாதிப்பு, சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும்” என்று குறிப்பிட்டு தன்னுடைய அறிக்கையை வெளியிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 9 பேர் உயிரிழப்பு என்று குறிப்பிட்டிருபதைக் கண்ட ஆளும் அதிமுகவினர், ஸ்டாலின் தவறாக குறிப்பிட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறி கடுமையாக விமர்சித்து ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
இதையடுத்து ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.ஆனால், அதற்குள் அதிமுகவினர், அதிமுக கூட்டணி கட்சியினர் ஸ்டாலின் டுவிட்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து டுவிட்டரில் விமர்சித்து வருகின்றனர்.
இதே போல, நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் அழைப்பு விடுத்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்ட வீடியோவில் தவறான தகவல் இடம்பெற்றதால் டுவிட்டர் நிர்வாகம் அவருடைய வீடியோவை நீக்கியது. இதையடுத்து, ரஜினி கோரோனா வைரஸ் தொற்று பற்றி தவறான தகவலைப் பரப்பியதாக விமர்சித்து திமுகவினர் டுவிட்டரில் ட்ரோல் செய்தனர்.
இந்த நிலையில், ஸ்டாலின் டுவிட்டர் விவகாரத்தை அறிந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் இறந்ததாக திமுக தலைவர் ட்விட்டரில் வதந்தி பதிவு செய்து நீக்கியுள்ளது, பதற்றம் உண்டாக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சுகாதார பேரிடர் தகவல் பரிமாற்றத்தை குறிப்பாக தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்!!” என்று விமர்சித்துள்ளார்.
இதே போல, பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனாவால் தமிழகத்தில் 9பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சிறிதுமின்றி மக்களை அச்சுறுத்துவது எந்தவித்தில் நியாயம்! இந்த லட்சணத்தில் உங்கள் எம்பிகள் ரஜினியை விமர்சிக்கிறார்கள்!” என்று ஸ்டாலினின் தவறானப் தகவலை சுட்டிக்காட்டி திமுகவினரை விமர்சித்துள்ளார்.
இதே போல, பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் கோவிந்தசாமி, “மத்தியரசு அறிவித்துள்ள தனிமைப்படுத்துதலால் மக்கள் அச்சப்படவில்லை நீங்கள் 9நபர்கள் இறந்ததாக பதிவிட்டு ஏற்படுத்திய பதட்டம்தான் அச்சத்தை தந்துள்ளது டுவிட்டரில் பொய் பரப்பி பின் அழிக்கும் உங்கள் மகன் உதயநிதி மற்றும் உங்கள் எம்பி செந்தில் இவர்கள் வரிசையில் இன்று நீங்களும்!?” என்று மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
இதனை திமுகவினர் சிலர், மு.க.ஸ்டாலின் டுவிட் செய்ததாக போட்டோஷாப் செய்யப்பட்டு பொய்யான தகவல் பரப்பப்படுவதாக டுவிட்டரில் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"