குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (அக்.26) சென்னை வந்தார். அவரை ஆளுனர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பொன்முடி மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.
இந்த நிலையில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம் எனக் கூறியுள்ளார். அதில், “குடியரசுத் தலைவருக்கு தமிழக மக்களினன் சார்பாக மீண்டும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீட் விவகாரத்தில் எங்கள் மாணவர்களுக்கு நீதி வேண்டும்.
நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகள் இந்த முடிவின் மீது தங்கியுள்ளது, இது மேலும் தாமதிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்வது என்பது தமிழக மக்களின் கூட்டு விருப்பம். அது நடக்கிறதா என்று பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ளது.
இந்த இயக்கத்தின் மூலம் 50 லட்சம் பேரின் கையெழுத்துக்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாநிதி மாறன், “நீட் தேர்வு இருப்பதால் தனது மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை” என வருந்தினார்.
அப்போது, “தாத்தா கலைஞர், மாமா மு.க. ஸ்டாலின்” என உருக்கமாக பேசியிருந்தார். இந்தப் பேச்சு வைரலானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“