‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது; இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று மு.க. ஸ்டால்ன் ட்வீட் செய்துள்ளார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசி அமைச்சர் உதயநிதி, சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாகி உள்ளது. பா.ஜ.க-வின் முன்னணி தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் முதல் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை வரை அனைவரும் உதயநிதி கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற இந்திய சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி அறநிலையத் துறை அலுவலம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 856-வது நாளில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது. இதனை, ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவைக் குறிப்பிட்டு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது; இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது என்று மு.க. ஸ்டால்ன் ட்வீட் செய்துள்ளார்.
ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றோடு 856 நாட்களாகிறது.
1000 ஆவது கோயில் கும்பாபிஷேகத்தை செப்.,10 அன்று மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்த்துகிறது இந்து சமய அறநிலையத்துறை.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் சராசரியாக தினம் ஒரு கோயிலில் குடமுழுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
கோயில் நிலங்களை மீட்டது, கோயில் சொத்துக்களை முறைப்படுத்தியது, நிர்வாக சீர்கேடுகளை களைந்தது என பி.கே. சேகர் பாபு அமைச்சராக இருப்பது அறநிலையத்துறையின் பொற்காலம்.” என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
இந்த பதிவை மேற்கோள்காட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது என்று ட்வீட் செய்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.
5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது தி.மு.க அரசு.
இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.
இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்குக் காரணமான அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“