Advertisment

MK Stalin Book Release : 'தமிழகத்தில் யாரும் எதையும் திணிக்க முடியாது' தலைவர்கள் உரை ஹைலைட்ஸ்

MK Stalin Book Release: மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில், ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் ஆகிய தேசியத் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
MK Stalin Book Release :  'தமிழகத்தில் யாரும் எதையும் திணிக்க முடியாது' தலைவர்கள் உரை ஹைலைட்ஸ்

MK Stalin Book Release: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுகிறது. ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நுலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

Advertisment

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிற இந்த நூல் வெளியீட்டு விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். நூல் வெளியிட்டு விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு நூல் குறித்து வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இவர்களுடன், திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோரும் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவின் இறுதியில் நூலை எழுதிய திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை வழங்குகிறார்.

மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில், ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் ஆகிய தேசியத் தலைவர்கள் கலந்துகொள்வதால் இந்த நிகழ்சி அரசியலில் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீடு குறித்து மு.க. ஸ்டாலின் சென்னை புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் கூறுகையில், “நான் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலில், எனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை அதில் பதிவு செய்துள்ளேன். இளமைக் காலம், பள்ளிப்படிப்பு, கல்லூரிக் காலம், அரசியல் ஆர்வம், முதலில் நடத்திய கூட்டம், அதில் முதல் பேச்சு, திரையுலகம், திருமணம், மிசா காலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் அதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 1976 வரையிலான பதிவுகளுடன் முதல் பாகமாக அதை எழுதியுள்ளேன். விரைவில் புத்தகக் காட்சிக்கும் அந்த நூல் விற்பனைக்கு வரும்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"


  • 18:56 (IST) 28 Feb 2022
    தமிழ்நாட்டை பாஜக என்றைக்கும் ஆளமுடியாது ராகுல் காந்தி கூறியது இன்னும் என் காதில் ஒலிக்கிறது - ஸ்டாலின்

    மு.க. ஸ்டாலின்: “தமிழ்நாட்டை பாஜக என்றைக்கும் ஆளமுடியாது ராகுல் காந்தி கூறியது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. ராகுல் காந்தி தமிழ்நாட்டின் கொள்கையைப் புரிந்துகொண்டு பேசுகிறார்.” என்று கூறினார்.


  • 18:54 (IST) 28 Feb 2022
    எப்பொழுதும் உங்களில் ஒருவனாகவே இருப்பேன் - மு.க.ஸ்டாலின் ஏற்புரை

    உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் மு.க. ஸ்டாலின் எற்புரை: “கலைஞர் போல எனக்கு பேசவோ, எழுதவோ தெரியாது, ஆனால் முயன்று பார்ப்பேன் எனத் தெரிவித்தேன்; அப்படி முயன்று பார்த்ததுதான் உங்களில் ஒருவன் நூல்.

    எனது கொள்கை திராவிட மாடல் கொள்கை, திராவிடவியல் ஆட்சிமுறை, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். இந்தியா கூட்டாட்சியாக செயல்பட வேண்டும்.” என்று கூறினார்.


  • 18:50 (IST) 28 Feb 2022
    எப்பொழுதும் உங்களில் ஒருவனாகவே இருப்பேன் - மு.க.ஸ்டாலின் ஏற்புரை

    உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் மு.க. ஸ்டாலின் எற்புரை: “எப்பொழுதும் உங்களில் ஒருவனாகவே இருப்பேன் என்பதை கூறும் விதமாகவே இந்த புத்தகத்திற்கு அப்படி பெயர் வைத்தேன்; என் வாழ்நாள் முழுவதும் உங்களில் ஒருவனாகவே செயல்படுவேன் என்பதை உறுதிபடக்கூறுகிறேன்” என்று கூறினார்.


  • 18:47 (IST) 28 Feb 2022
    நான் அரசியல் பயிராகத்தான் வளர்ந்தேன் - மு.க. ஸ்டாலின்

    மு.க. ஸ்டாலின்: “என்னுடைய 23 வயது வரைதான் இந்த புத்தகம். நாளை எனது பிறந்தநாள். என்னுடைய பிறந்தநாளுக்கு முன்னதாக இந்த புத்தகம் பிறந்திருக்கிறது. முதல் 25 வயது வரை முக்கியமான கால கட்டம். ஒருவரின் எதிர்க்கால வாழ்க்கையைத் தீர்மாணிக்கிறது. நான் அரசியல் பயிராகத்தான் வருகிறேன். பத்திரிகையாளர் கேள்வி அரசியலுக்கு வராவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் அரசியலில்தான் இருந்திருப்பேன்.” என்று கூறினார்.


  • 18:35 (IST) 28 Feb 2022
    நாட்டிலுள்ள எந்த மாநிலத்தையும் பிரதமர் புரிந்துகொள்ளவில்லை - ராகுல் காந்தி

    ராகுல் காந்தி: நாட்டிலுள்ள எந்த மாநிலத்தையும் பிரதமர் புரிந்துகொள்ளவில்லை. விடுதலைக்கு பிறகு இந்தியாவில் ஒரு மாநிலத்தின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அந்த மக்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. குஜராத், உ.பி அதிகாரிகள் ஜம்மு காஷ்மீரை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். இது ஜம்மு காஷ்மீருக்கு இழைக்கப்பட்ட அநீதி.

    நாம் வேற்றுமையில் ஒற்றுமையைப் பற்றி சிறப்பாகப் பேசுகிறோம். இந்தியாவில் என்கிற நாடு பல மொழி கலாச்சாரம் கொண்டுள்ளது. இந்து இந்தியாவினுடைய பலம். இதை தமிழ்நாடு மக்களிடம் தெரிந்துகொள்ளவேண்டும். நாம் ஒவ்வொருவரை மதிக்க வேண்டும். எங்களுடைய ஒட்டுமொத்த கருத்து வேற்றுமையில் ஒற்றுமை.

    நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்களை ஒவ்வொன்றாக நசுக்குகிறது. பாஜகவுடன் எப்படி சண்டை போடுவது என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் வரலாற்றை, பாரம்பரியத்தை எதிர்த்து செயல்படுகிறார்கள். அவர்களால் முடியாது.

    முதல்வர் ஸ்டாலினுக்கு முன்கூட்டியே என் பிறந்தநாள் வாழ்த்துகள். ஸ்டாலின் முன்னைவிட இளமையாக தோற்றமளிக்கிறார்.” என்று கூறினார்.


  • 18:27 (IST) 28 Feb 2022
    3,000 ஆண்டுகளாக யாராலும் எதையும் திணிக்க முடியவில்லை - ராகுல் காந்தி

    முதல்வர் ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி: எனது அம்மா நாளைக்கு ஸ்டாலின் பிறந்த நாள் என்று கூறினேன். நான் எனக்கு தெரியும் என்று கூறினேன். அவரிடம் ஸ்டாலினுக்கு என்ன வயது இருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஸ்டாலினுக்கு 50-60 வயதுதான் இருக்கும் என்றார். நான் அவருக்கு 69 வயது என்று கூறினேன். அதற்கு அவர் சாத்தியம் இல்லை. பின்னர் கூகுளில் சரிபார்த்துக்கொண்டார்.

    நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு என் மீது எந்த அளவுக்கு அன்பு இருக்கிறது. நான் வெளியே வரும்போது என்னை அறியாமல் தமிழ் என்று கூறினேன். நான் என் காரில் ஏறிய பிறகு அப்படி சொன்னேன் என்று யோசித்தேன். நீங்கள் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. தமிழ்மொழி பேசவில்லை. 3,000 ஆண்டுகள் நாகரிகம் உள்ள மொழி. தெரிந்துகொள்ள முற்படவில்லை. அதற்கு பிறகு, நீ தமிழ் என்று கேட்டுக்கொண்டேன். எப்படி அந்த உரிமையை எடுத்துக்கொண்டேன் யோசித்தேன். பின்னர், உணர்ந்தேன். என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது. ஒரு தந்தையை இழப்பது என்பது சோகமான அனுபவம். நான் அந்த சோகமான அனுபவத்தைத் திரும்பத் திரும்ப என்ணிப்பார்க்கிறேன். நான் உணர்ந்தேன். என்னை தமிழன் என்று அழைத்துக்கொள்வதற்கான எனக்கு இருக்கிறது. தமிழன் இருப்பதற்கான பொருள் என்ன, நான் இந்த மண்ணுக்கு வரும்போது பணிவான குணத்துடன் வருகிறேன். உங்களுடைய வரலாற்றில் பாரமபரியத்துக்கு தலைவணங்குகிறவனாகவே வருகிறேன்.

    இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டேன். நாம் மாநிலங்கள் என்று சொல்லும்போது மாநிலம் எங்கிருந்து வருகிறது. மண்ணைப் பற்றியது, மக்களிடம் இருந்து வருகிறது. குரலில் இருந்து மொழி வருகிறது. கலாச்சாரம் இருகிறது; வரலாற்றில் இருந்து மாநிலம் வருகிறது.

    நான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறினேன். மாநிலங்களில் இருந்துதான் இந்தியா வருகிறது.

    பிரதமர் பொருள் புரியாமல் பேசுகிறார். 3,000 ஆண்டுகள் பழமையான நாடு. சொற்களைப் புரிந்துகொள்ளவில்லை, பொருளைப் புரிந்துகோள்ளவில்லை பிறகு எப்படி தமிழ்நாட்டைப் பற்றி பேசுகிறார். அவர்கள் திருப்பித்திருப்பி பேசுகிற ஒன்றை புரிந்துகொள்ளாமல் அவர்கள் மீது என்ன மரியாதை வைத்திருக்கிறார்கள். கடந்த 3,000 ஆண்டுகளாக யாராலும் எதையும் திணிக்க முடியவில்லை.” என்று கூறினார்.


  • 18:15 (IST) 28 Feb 2022
    அற்புதமான புத்தகத்தை வழங்கிய எனது மூத்த சகோதரர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன் - ராகுல் காந்தி

    ராகுல் காந்தி: “அற்புதமான புத்தகத்தை வழங்கிய எனது மூத்த சகோதரர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன்.” என்று கூறினார்.


  • 18:04 (IST) 28 Feb 2022
    என்னை போல, ஸ்டாலினும் சிறை வாசத்தை அனுபவித்துள்ளார் - உமர் அப்துல்லா

    உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உரை: “ஸ்டாலினின் உழைப்பை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். என்னை போல, ஸ்டாலினும் சிறை வாசத்தை அனுபவித்துள்ளார். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என தொடர் வெற்றிகளை குவிக்கிறார் ஸ்டாலின். எந்த மதமாக இருந்தாலும், உடை அணிவது என்பது அவரவர் சொந்த விருப்பம். நமது தனித்தன்மையை ஒருபோதும் இழந்து விடக்கூடாது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரலை கேட்காமல் மாநிலம் பிரிக்கப்பட்டது” என்று கூறினார்.


  • 17:54 (IST) 28 Feb 2022
    நாட்டின் மத சுதந்திரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது - உமர் அப்துல்லா

    உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உரை: “நான் என்ன உடை அணிய வேண்டும், எதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது எனக்கும் என்னுடைய இறைநம்பிக்கைக்கும் இடையிலானது. மொழி, மதம், ஆடை, உணவு சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது; ஹிஜாப் அணிவது, தாடி வைப்பதெல்லாம் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.

    காஷ்மீருக்காக தமிழ்நாடு குரல் கொடுத்து, தோளோடு தோள் நின்றதை மறக்க மாட்டோம். இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலம் ஒன்று யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது; எங்கள் மக்களிடம் எந்த கருத்தும் கேட்கப்படாமலேயே அது நடந்தது” என்று கூறினார்.


  • 17:51 (IST) 28 Feb 2022
    ஸ்டாலினுக்கு ஜம்மு காஷ்மீரின் பாரம்பரிய கம்பளத்தை வழங்கினார் உமர் அப்துல்லா

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக ஜம்மு காஷ்மீரின் பாரம்பரிய கலை அம்சம் கொண்ட கம்பளத்தை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா வழங்கினார்.


  • 17:48 (IST) 28 Feb 2022
    நாட்டின் மத சுதந்திரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது - உமர் அப்துல்லா

    உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உரை: “நான் என்ன உடை அணிய வேண்டும், எதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது எனக்கும் என்னுடைய இறைநம்பிக்கைக்கும் இடையிலானது. மொழி, மதம், ஆடை, உணவு சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது; ஹிஜாப் அணிவது, தாடி வைப்பதெல்லாம் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.


  • 17:43 (IST) 28 Feb 2022
    எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாததால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது - டி.ஆர். பாலு

    டி.ஆர். பாலு: “எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாததால்தான் இன்றைக்கு மதச்சார்புள்ளவர்கள் இந்த நாட்டை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் இனிமேலாவது ஒற்றுமையுடன் இருந்து போராட வேண்டும்” என்று கூறினார்.


  • 17:30 (IST) 28 Feb 2022
    காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுத்த அவருக்கு நன்றி - உமர் அப்துல்லா

    உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உரை: “காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிய போது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் ஸ்டாலின்; காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுத்த அவருக்கு நன்றி. நாடு தற்போது அபாயகரமான நிலையில் உள்ளது.” என்று கூறினார்.


  • 17:26 (IST) 28 Feb 2022
    பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகள் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - தேஜஸ்வி

    உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் தேஜஸ்வி யாதவ் உரை: “தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் போன்றோரால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் இந்தியா முழுவதும் இன்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்று கூறினார்.


  • 17:08 (IST) 28 Feb 2022
    தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தின் மீது ஈர்ப்புகொண்ட லாலு பிரசாத் பீகாரில் செயல்படுத்தினார் - தேஜஸ்வி யாதவ்

    உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் தேஜஸ்வி யாதவ் உரை: “உங்களில் ஒருவன் புத்தகம் அனைவராலும் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தின் மீது மிகவும் ஈர்ப்புகொண்ட எனது தந்தை லாலு பிரசாத் யாதவ், எங்கள் பீகாரிலும் அதனை செயல்படுத்தினார்” என்று கூறினார்.


  • 16:59 (IST) 28 Feb 2022
    'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழா - தேஜஸ்வி யாதவ் சிறப்புரை

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் சிறப்புரையாற்றி வருகிறார்.


  • 16:56 (IST) 28 Feb 2022
    அப்பாவைத் தேடுகிறேன் - கனிமொழி பேச்சு

    திமுக எம்.பி கனிமொழி: “ஆயிரமாயிரம் கண்கள் இருக்கும் இந்த அரங்கில் இதையெல்லாம் பார்த்து பெரிதுவக்கும் இரண்டு கண்களைத் தேடுகிறேன். உங்களை வாரியணைத்து உச்சி முகர்ந்து “வாழ்க உன் பணி ஸ்டாலின்” என கரகரத்த குரலில் கொஞ்சும் அப்பாவைத் தேடுகிறேன்” என்று கூறினார்.


  • 16:48 (IST) 28 Feb 2022
    யாரையும்விட எம்.ஜி.ஆர் உடன் இருந்தவர் மு.க. ஸ்டாலின்

    எம்.ஜி.ஆர் உடன் 25 நாள் பிரச்சார சுற்றுப் பயணம் செய்துள்ளார் மு.க. ஸ்டாலின். அதனால், எம்.ஜி.ஆர் உடன் நடித்த நடிகைகள்ஜெயலலிதா, சௌகார் ஜானகியைவிட அதிக நாள் இருந்தவர் மு.க.ஸ்டாலினாகத்தான் இருந்திருப்பார்.


  • 16:44 (IST) 28 Feb 2022
    கலைஞரைப் போல ஒரு தலைவர் யாருக்கு கிடைப்பாரா; சத்தியராஜ் வாழ்த்துரை

    தமிழகத்திற்கு கலைஞரைப் போல ஒரு தலைவர் யாருக்கு கிடைப்பாரா என்று நடிகர் சத்தியராஜ் வாழ்த்திப் பேசினார்.


  • 16:31 (IST) 28 Feb 2022
    ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூலை வெளியிட்டார் ராகுல் காந்தி

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூலை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.


  • 16:25 (IST) 28 Feb 2022
    ஒரு சிற்பி தன்னை செதுக்கிக் கொண்ட கதை; உங்களில் ஒருவன் நூல் குறித்து கனிமொழி கருத்து

    முதல்வர் ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் கனிமொழி வரவேற்புரை, இந்த புத்தகம் ஒரு சிற்பி தன்னை செதுக்கிக் கொண்ட கதை என்று கூறினார்.


  • 16:08 (IST) 28 Feb 2022
    ஸ்டாலின் நூல் வெளியீடு: ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் விழா மேடைக்கு வருகை

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில், பங்கேற்க வருகை தந்துள்ள, ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் விழா மேடைக்கு வந்தனர்.


  • 15:53 (IST) 28 Feb 2022
    ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், டி.கே.ரங்கராஜன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பார்வையாளர்கள் வரிசையில் பங்கேற்றுள்ளனர்.


  • 15:48 (IST) 28 Feb 2022
    ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா அரங்கத்திற்கு பினராயி விஜயன் வருகை

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா அரங்கத்திற்கு கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் வந்தடைந்தார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.


  • 15:45 (IST) 28 Feb 2022
    ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா அரங்குக்கு உமர் அப்துல்லா வருகை

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா அரங்குக்கு ஜம்மு காஷ்மிர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வந்தார்.


  • 15:44 (IST) 28 Feb 2022
    மு.க. ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா அரங்குக்கு தேஜஸ்வி யாதவ் வருகை

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா அரங்குக்கு பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வந்தார்.


  • 15:43 (IST) 28 Feb 2022
    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா அரங்குக்கு வருகை

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா அரங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.


  • 15:39 (IST) 28 Feb 2022
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா சற்று நேரத்தில் தொடக்கம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.


  • 14:38 (IST) 28 Feb 2022
    ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் ராகுல் காந்தி; காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Mk Stalin Rahul Gandhi Tejashwi Yadav Pinarayi Vijayan Omar Abdullah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment