முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்று, கேள்வி பதில் வடிவில் வீடியோ வெளியிடுள்ளார். அதில், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்படி மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாகவும் முதலமைச்சருக்கு சனி, ஞாயிறு ஆஃபீஸ் நேரம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற முழக்கத்தின்படி, கேள்வி பதில் வடிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
கேள்வி: ஞாயிற்றுக்கிழமைகூட ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறீர்களே?
மு.க. ஸ்டாலின்: முதலமைச்சருக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அலுவலக நேரம் எல்லாம் கிடையாது. சென்னையில் கன மழை பெய்தபோது மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் நிம்மதியாக இருந்தார்கள் என்றால், அதற்கு நம்ம அரசு முன்கூட்டியே எடுத்த தீவிர நடவடிக்கைகள்தான் காரணம். அதில் இன்னும் சில வேலைகள் மீதி இருக்கிறது என்று அப்போதே கூறினேன். அந்த மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கிற பணி இப்போது தீவிரமாக நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். கிண்டியில் கட்டப்பட்டுவரும் உயர்தர பல்நோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணிகளைப் பார்த்தேன்.
முதலமைச்சர் என்கிற முறையில் நானே நேரில் ஆய்வுகளை மேற்கொள்கிறபோது, அதிகாரிகள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெறுவார்கள். அதனால், திட்டங்களை நாம் எதிர்பார்ப்பதைவிட வேகமாக நிறைவேற்றி முடிக்கலாம். அதனால்தான், நான் கள ஆய்வுக்கு முக்கியத்துவம் தருகிறேன்.
கேள்வி: இப்போது கள ஆய்வில் முதலமைச்சர் என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறீர்களே, இதனுடைய செயல்முறை எப்படி இருக்கும்?
மு.க. ஸ்டாலின்: களப்பணி என்பது எனக்கு புதிது அல்ல. களந்த்தில் இருந்து வந்தவன் நான். களப்பணி ஆற்றி முன்னு வந்தவன் நான். நான் சென்னையின் மேயராக இருந்தபோது மாநகரத்தின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியுள்ளேன். குறிப்பாக சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 9 மேம்பாலங்களைக் கட்டினோம். ஒதுக்கப்பட்ட நிதியில் 30 விழுக்காடு மிச்சப்படுத்தினோம். குறிப்பிட்டக் காலத்திற்கு முன்னதாகவே அதை கட்டி முடித்தோம்.
அதே மாதிரி நான், துணை முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித்துறை சார்பாக ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடித்து, கலைஞரின் பாராட்டைப் பெற்றோம். அந்த திட்டத்தால் காலங்காலமாக தண்ணீர் கிடைக்காமல் வறண்டு கிடந்த ராமநாதபுரம் பூமி இன்று தண்ணீர் பஞ்சம் இல்லாத பகுதியாக மாறியிருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
தலைமைச் செயலகத்தில் திட்டங்களை உருவாக்குகிறோம். சட்டமன்றத்தில் அறிவிக்கிறோம். நிதி ஒதுக்கீடு செய்கிறோம். இந்த திட்டங்கள் எல்லாம் எவ்வளவு வேகமாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்று கோட்டையில் எனது அறையில் டேஷ்போர்டில் நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதோடு, இந்த திட்டங்களின் செயல்பாட்டை நேரில் பார்த்து, முடுக்கி விடுவதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல இருக்கிறேன். முதலாவதாக பிப்ரவரி 1-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களை விரிவா ஆய்வு செய்யப் போகிறேன். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான மக்கள் நலத் திட்டங்கள் இந்த ஆய்வில் முக்கிய அம்சங்களாக இருக்கும். சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து அதிகாரிகளுடனும் கள ஆயில் கிடைத்த தகவ்களின் அடிப்படையில் திட்ட செயல்பாடுகளைப் பற்றி விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
என்னைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் தொடங்கி கடைநிலை அரசு ஊழியர் வரைக்கும் ஒரே நோக்கத்துடன் செயல்பட்டால் தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக மாறும். அதற்கான செயல்திட்டம் தான். கள ஆய்வில் முதலமைச்சர் என்கிற இந்த திட்டம்” என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.