மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜ.க தலைவர் மற்றும் ஷிண்டே சேனா எம்.எல்.ஏ அச்சுறுத்தல் விடுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மு.க. ஸ்டாலின் தனது பதிவில் கூறியிருப்பதாவது: “பா.ஜ.க. தலைவர் ஒருவர், ராகுல் காந்தியின் பாட்டிக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும் எனவும், ஷிண்டே சேனாவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்குப் பரிசு எனவும், இன்ன பிற வகைகளிலும் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
எனது சகோதரர் ராகுல் காந்தியை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதும், நாளுக்கு நாள் அவருக்குக் கூடி வரும் பொதுமக்களின் ஆதரவும் பலரையும் மிரளச் செய்துள்ளதன் தொடர்ச்சியாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“