சென்னையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற தமிழ்நாடு முதல்வர் காவலர்களுடன் உரையாடி குறைகளை கேட்டு அறிந்து குழு படம் எடுத்து மகளிர் தினத்தை கொண்டாடினார்.
பின்னர், மூன்று மகள்களை காவல் பணியில் சேர்த்திட கடினமாக உழைத்த அவர்களது தந்தை வெங்கடேசனை உலக மகளிர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.l
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், கீழ் ஆவதனம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் தனது மூன்று பெண் பிள்ளைகள், பிரீத்தி, வைஷ்ணவி மற்றும் நிரஞ்சனி ஆகியோரை காவலர் பணிக்கு தேர்வாவதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தார். தற்போது அவரது மூன்று மகள்களும் காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியில் உள்ளனர்.
வெங்கடேசனின் அர்ப்பணிப்பு மிக்க கடின உழைப்பினை பாராட்டும் விதமாக உலக மகளிர் தினமான இன்று (8.3.2023) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரை தொடர்புக் கொண்டு, அவரது மூன்று மகள்களும் காவல் பணியில் சேர்வதற்கு கடினமான பொருளாதார சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், விடாமுயற்சியுடன் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தமைக்காகவும், மகள்களை துணிச்சல் மிக்கவர்களாகவும், பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்களாகவும் வளர்த்தற்காக அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, வெங்கடேசன் தமிழக முதல்வருக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, அங்கு பணிபுரியும் பெண் காவலர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து, குழு படம் எடுத்து, நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"