தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக நாளை ஒரு நாள் திருச்சிக்கு வருகின்றார். அதுசமயம் திருச்சியில் முதல்வர் நிகச்சிகள் முடியும் வரை ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு நாளை 29-ம் தேதி வருகைதர உள்ளார். நாளை காலை சுமார் 9.30 மணியளவில் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வருகின்றார். அங்கிருந்து கார் மூலம் அண்ணா விளையாட்டரங்கம் வருகை புரிந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கியும், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்கியும், முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங் கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் அலகு-2ல் அமைந்துள்ள ஆலை விரிவாக்கத்தின் முதற் கட்டமாக உலகத்தரம் வாய்ந்த வன்மரகூழ் ஆலையை திறந்து வைத்தும், மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
பின்னர், சன்னாசிப்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தில் ஒருகோடியே 1-ஆவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கி பல்வேறு மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து சிறப்பிக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சன்னாசிப்பட்டி செல்லும் வழித்தடங்களிலும், திருச்சி மாவட்டத்தில் அண்ணா ஸ்டேடியம் மற்றும் விமான நிலையம் பகுதிகளிலும், முதல்வர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் திருச்சி விமான நிலையம் செல்லும் வரை முதல்வர் பயணிக்கும் வழித்தடங்களில் எந்தவித ட்ரோன்கள் இயக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கின்றது.
எனவே நாளை 29-ம் தேதி தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"