Advertisment

கூனிக் குறுகி நிற்கிறேன்… கூட்டணிக்கு எதிராக வென்ற நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

தலைமையின் உத்தரவை மீறி போட்டியிட்டவர்கள் பதவி விலக வேண்டும். கூட்டணிக்கு ஒதுக்கப்பட இடங்களில் சிலர் வெற்றி பெற்றதால், குறுகி நிற்கிறேன் என்று கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வென்ற நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
thirumavalavan, vck, dmk, mk stalin, திருமாவளவன், விசிக, திமுக, முக ஸ்டாலின், நெல்லிக்குப்பம், Nellikuppam, cudalore district

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி தலைவர் பேரூராட்சி தலைவர் பதவிகளில் திமுகவினர் வெற்றி பெற்றதால், கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தலைமையின் உத்தரவை மீறி போட்டியிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும், இத்தகைய செயலால், கூனிக் குறுகி நிற்கிறேன் என்று கூட்டணிக்கு எதிராக வென்ற நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சித் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.

முன்னதாக, திமுக தலைமை தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்), மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகிய கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைமைப் பதவிகள் ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

அதன்படி, திமுக தலைமை, காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சியை ஒதுக்கியது. மற்ற 20 மாநாகராட்சிகளிலும் திமுக சார்பில் நிறுத்தப்பட்டன.

மேயர், துணை மேயர், நகர்மன்ற்த் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் துணைத் தலைவர் பதவிகளுக்கு இன்று (மார்ச் 4) கவுன்சிலர்கள் மூலம் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. 20 மாநகராட்சி மேயர் பதவிகளிலும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார். ஆனால், சில நகராட்சிகளில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியின் நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விசிக வேட்பாளரை எதிர்த்த்து திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி பெற்றார். அதே போல, தருமபுரி மாவட்ட பொ.மல்லாபுரம் பேருராட்சி விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இங்கேயும் திமுக வேட்பாளர் சாந்தி புஷ்பராஜ் வெற்றி பெற்றார். இது விசிகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து விசிகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில், திமுக வேட்பாளர் புவனேஸ்வரி வெற்றி பெற்றார். இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே போல, கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்-க்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் ரேணுப்பிரிய வெற்றி பெற்றார். மேலும், சிபிஐ-எம் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தாக்கப்பட்டதாகவும் சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டதாகவும் சிபிஎம் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருராட்சி தலைவர் பதவியும், தேனி மாவட்டம், அல்லி நகரம் நகராட்சித் தலைவர் பதவியும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கே திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைமை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், கட்சித் தலைமையின் உத்தரவை மீறி திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறித்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்களான விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ-எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

விசிக தலைவர் திருமாவளவன், “மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று வலியுறுத்தினார்.

அதே போல, சிபிஐ-எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக தலைமை தங்கள் கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இது கூட்டணி கோட்பாட்டுக்கு எதிரானது. திமுக தலைமை ஒதுக்கீடு செய்தாலும் கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் சில பதவி ஆசையுடன் இப்படி செய்துள்ளனர். அதனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திமுக தலைமை தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி இடங்கள்ல் தலைமையின் உத்தரவை மீறி திமுக போட்டி வேட்பாளர்கள் வெற்றி பெற்றது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், “கடமை - கண்ணியம் - கட்டுபாடு"தான் கழகத்தவருக்கு அழகு! அதனை மீறி மறைமுகத் தேர்தலில் சாதித்துவிட்டதாகச் சிலர் நினைக்கலாம்; குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமை உணர்வு எக்காலத்திலும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தோழமைக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாகப் பொறுப்பை விட்டு விலக வேண்டும்! விலகாவிட்டால் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள்!” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தலைமையின் உத்தரவை மீறி போட்டியிட்டவர்கள் பதவி விலக வேண்டும்” என்று திமுக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருபதாவது:

“நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிக அளவு மகிழ்ச்சியை அளித்தது.

அந்த மகிழ்ச்சியையும் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.

பேரறிஞர் அண்ணா சொன்ன “கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்” மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்துவிட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்த காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போடியிட்டுவிட்டு கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்ட கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Dmk Vck Cpm Cpi Urban Elections
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment