காவிரி விவகாரத்தில் முதல்வர் பழனிசாமியின் முடிவை வரவேற்கிறேன் - ஸ்டாலின்

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கொளத்தூரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அவர் உண்மையிலேயே, கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா? மாட்டாரா? என்பது வேறு விஷயம். ஒருவேளை, வெளியாகியிருக்கும் இந்த செய்தி உண்மையாக இருக்குமெனில், நான் அதனை வரவேற்கிறேன். காலம் கடந்த ஒரு முடிவாக இருப்பினும், இப்போதாவது அதை செயல்படுத்த முடிவெடுத்து இருப்பது உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்று.

ஆனால், முதல்வர் அவர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும், அனைத்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகளையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றால் தான், இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறும். தேவைப்பட்டால், முதல்வர் பழனிசாமி அவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒன்றுதிரட்டி, டெல்லிக்கே சென்று பிரதமரை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்த வேண்டும். பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது வழக்கு போடுவதைக் கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, உதயநிதி அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நேரிடையாகப் பதில் அளிக்காத ஸ்டாலின், உதயநிதி அரசியலுக்கு வந்துவிட்டாரா என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றார்.

×Close
×Close