அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய நிதியுதவியை அனுமதித்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் சட்டப்பூர்வ செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறியிருந்தது.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. அப்போது, தேர்தல் பத்திரங்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியை (எஸ்பிஐ) கேட்டுக் கொண்டது.
மேலும் நீதிமன்றம், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 29(சி)(1), நிதிச் சட்டம் 2017 இன் பிரிவு 137, நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 182(3) மூலம் திருத்தப்பட்டது. சட்டம், 2017 மற்றும் 2017 ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தால் திருத்தப்பட்ட பிரிவு 13A(b) ஆகியவை 19(1)(a) விதியை மீறுவது ஆகும். இது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது” எனத் தெரிவித்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை திமுக தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர், “தேர்தல் பத்திரம் அரசியல் அமைப்பிற்கு முரணானது; ஜனநாயகம், அரசியல் கட்சிக்களுக்கான சமச்சீரான போட்டிக்களத்தை இது மீட்டெடுத்துள்ளது.
மேலும், ஜனநாயகர்களின் மீதான சாமானியர்களின் நம்பிக்கையை உறுதி செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
“எங்களுக்கு அந்த மாதிரி பணமே வரலை; தேர்தல் பத்திர நிதியை தடுத்தால்தான் எங்களை போன்றவர்கள் கட்சி நடத்த வாய்ப்பாக இருக்கும்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி
தேர்தல் பத்திரங்கள்மூலம் தேர்தல் நிதிகளைக் குவிக்கும் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் தேர்தல் நிதி சேர்ப்பு முறை தெள்ளத் தெளிவாக்கப்பட்டதன்மூலம், மோடி அரசின் தேர்தல் வெற்றி, வித்தைகளின் ரகசியம் வெளிச்சத்திற்கு வரும் நிலையை இது நிச்சயம் ஏற்படுத்தும்.
ஜனநாயகப் பாதுகாப்பு, தேர்தல் முறையின் தூய்மைக்கு இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒரு சிறப்பான தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பு பத்திரமான தேர்தலுக்கு வழிகாட்டும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“