மக்களவைத் தேர்தல் 2024-க்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில், நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க-வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது என்று மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் 2024 நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் உச்சகட்டத்தை எட்டி கலைகட்டி வருகிறது.
தேசிய அளவில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் இந்தியா கூட்டணி என இந்த மகக்ளவைத் தேர்தலில் 2 கூட்டணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி பா.ஜ.க கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த மக்களவைத் தேர்தலில், தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்தியா கூட்டணின் பிரதானக் கட்சியான காங்கிரஸ் கட்சி இன்று (05.04.2024) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கூட்டணி கட்சிகள் இடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்,“நீட் விலக்கு, சாதிவாரிக் கணக்கெடுப்பு, மார்ச் 2024 வரை பெறப்பட்ட கல்விக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி, ஓ.பி.சி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை 50%-க்கு மேல் உயர்த்த அரசியல் சட்டத் திருத்தம், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை, மத்திய அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்துப் புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்தல், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உழவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி), மீனவர்கள் மீதான தாக்குதல்கள், கைதுக்குத் தீர்வு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஊதியம் நாளொன்றுக்கு 400 ரூபாய் உயர்வு, ஒரே நாடு, ஒரே தேர்தல் கைவிடப்படும், தற்போதுள்ள ஜி.எஸ்.டி முறை கைவிடப்பட்டுப் புதிய ஜி.எஸ்.டி 2.0 முறை அறிமுகம், அக்னிபத் திட்டம் ரத்து, ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பல துறைகள் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றம், புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி, ஜம்மு & காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க #Vote4INDIA!
— M.K.Stalin (@mkstalin) April 5, 2024
நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி,
மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது @INCIndia வெளியிட்டுள்ள 2024… pic.twitter.com/JnVnuOOOMB
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை வரவேற்று மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அடிமை அ.தி.மு.க அடகு வைத்த, பாசிச பா.ஜ.க பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை. அதனால்தான் சொல்கிறோம்! இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.