மு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா சந்திப்பு : திமுக.வுக்கு என்ன லாபம்?

தமிழ்நாட்டில் திமுக.வும், காங்கிரஸும் தனித்தனியாக நின்றால் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக உடைவது நிச்சயம்!

மு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புகளால் அரசியல் ரீதியாக திமுக.வுக்கு என்ன பலன்?

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய அரசியல் நிகழ்வுகளை நிர்ணயிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தேசிய அளவில் பாஜக.வுக்கு எதிராக மாநிலக் கட்சிகளை அணி திரட்டும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு அண்மையில் ஆதரவு தெரிவித்தார். அதனை தொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கருத்துகளை கூறி வருவதால் பாஜக எதிர்ப்பாளர்களின் கவனம் அவர் மீது திரும்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா ஆகியோர் பாஜக.வில் இருந்துகொண்டே நரேந்திர மோடியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தபடி இருந்தனர்.

யஷ்வந்த் சின்ஹா அண்மையில் பாஜக.வில் இருந்து விலகிவிட்டார். சத்ருகன் சின்ஹா இன்னமும் கட்சிக்குள் இருந்துகொண்டு கலகக் குரல் எழுப்புகிறார். இவர்கள் இருவரும் சென்னையில் வணிகர் சங்கப் பேரவையின் விழாவில் பங்கேற்பதற்காக வந்தனர். நேற்று மாலை இவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து உரையாடினார்.

தொடர்ந்து யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதித்தனர். அப்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அரசியல் வியூகங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் இதை தெளிவுபடுத்தினர்.

மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடத்தி வரும் இது போன்ற ஆலோசனைகள் நிஜமாகவே பாஜக.வுக்கு குடைச்சல் கொடுக்குமா? என்பதுதான் இங்கே எழும் முதல் கேள்வி! இப்படி ஆலோசனை நடத்துகிற தலைவர்கள் யாருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலத்தில் செல்வாக்கு இல்லை. எனவே மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வலிமை மட்டுமல்ல, கனவும் இவர்களுக்கு கிடையாது. ஆனால் மோடியை வீழ்த்த வேண்டும் என்பது கனவு!

மோடியை வீழ்த்தினால் ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள கட்சியாக காங்கிரஸ் தன்னை குறிப்பிடுகிறது. நாடு முழுவதும் அதிக மாநிலங்களில் செல்வாக்கான கட்சி காங்கிரஸ்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த காங்கிரஸால் இப்படி தேசிய அளவில் பாஜக எதிர்ப்புத் தலைவர்களை அணி திரட்ட முடியாததுதான் துரதிர்ஷ்டம்!

மம்தா, சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலின், யஷ்வந்த் சின்ஹா என மோடியை வீழ்த்தத் தயாராகும் தலைவர்கள் யாரும் அழுத்தம் திருத்தமாக காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என கூறுவதில்லை. காங்கிரஸ் தலைமையில் திரள்வதிலும் இவர்களில் பலருக்கு உடன்பாடு இல்லை. ஆக, நிஜமாகவே இது பாஜக எதிர்ப்பு அணியா? அல்லது பாஜக.வின் ஸ்லீப்பர் செல்களா? என்கிற விமர்சனங்களும் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் அரசியல் செல்வாக்கு இல்லாத தலைவர்களை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் சந்தித்து வருவதால் திமுக.வுக்கு என்ன லாபம்? இந்த சந்திப்புகள் மூலமாக மு.க.ஸ்டாலின் தன்னை அகில இந்திய அளவில் மதிக்கப்படும் தலைவராக வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறது. பாஜக எதிர்ப்பில் திமுக உறுதியாக நிற்பதாக பறைசாற்றிக் கொள்ளலாம். இதன் மூலமாக தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிந்தாமல் திமுக அறுவடை செய்யலாம்.

அதேசமயம் காங்கிரஸ், இந்த சந்திப்புகளை ரசிக்கவில்லை என்பது நிஜம்! பெரிய கட்சியின் தலைவரான ராகுல் காந்தியை கண்டுகொள்ளாமல் கூடிப் பேசும் இந்தக் கட்சிகள், மிகக் குறைவான சீட்களை விட்டுத் தருவதாக காங்கிரஸை பிளாக் மெயில் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸுடன் இந்தக் கட்சிகள் உரசிக் கொண்டால் அது பாஜக.வுக்குத்தான் லாபம்! குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக.வும், காங்கிரஸும் தனித்தனியாக நின்றால் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக உடைவது நிச்சயம்!

காங்கிரஸ் தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்திப்பதைக்கூட பாஜக எதார்த்தமாக எடுத்துக் கொள்ளும். ஆனால் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோருக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் கிடைப்பதை பாஜக மேலிடத்தால் ஜீரணிக்கவே முடியாது. இது திமுக மீது டெல்லி ஆட்சியாளர்களுக்கு கோபத்தை அதிகரிக்கும். அந்தக் கோபம், எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் ஆயுளை அதிகரிக்கலாம்.

பிளஸ்-ஸும், மைனஸும் கலந்த பலன்களே திமுக.வுக்கு கிடைக்கிறது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close