திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடங்க இருந்த எழுச்சி பயணம் தள்ளிப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றி அக்டோபர் 24ம் தேதியே ஐஇதமிழ் செய்தியை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் 2016ம் ஆண்டு நமக்கு நாமே பயணம் மேற்கொண்டார். அது கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. இது கடந்த சட்டமன்ற தேர்தலில் அது எதிரொலித்தது. திமுக 89 சட்டமன்ற தொகுதிகளை வென்றது.
இந்நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து தமிழக அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில், மு.க.ஸ்டாலின், மீண்டும் எழுச்சி பயணத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். கடந்த முறை, மக்களை நேரடியாக சந்தித்தோம். இப்போது, மக்கள் நம்மை தேடி வந்து புகார் செய்யுமாறு பயணத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னார்.
நவம்பர் 7ம் தேதி சென்னையில் இந்த பயணத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் மம்தா வரமுடியாமல் போனது. அவர், நவம்பர் மாத இறுதியில் தேதி தருவதாக தெரிவித்தார்.
நவம்பர் மாதம் பருவ மழை பெய்யும் நேரம் என்பதால், எழுச்சி பயணம் தள்ளிப்போகிறது. பொங்கலுக்கு பின்னர்தான், எழுச்சி பயணம் தொடங்கும் என அக்டோபர் 24ம் தேதியே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் நேற்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக எழுச்சி பயணம் தள்ளிப்போகிறது என தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத அதிமுக ஆட்சியின் அவலங்களை எதிர்த்து நவம்பர் முதல் வாரம் தொடங்கி தமிழகம் முழுவதும்ம் மாபெரும் எழுச்சி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். அதற்கான பணிகளில் திமுக நிர்வாகிகள் தீவிரமாக இருந்த நிலையில், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் திடீரென்று கடுமையாகி சென்னை மாநகர், புறநகர் மக்களும் கடலோர மாவட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் மழையையோ சமாளிக்க முடியாத வகையில் அதிமுக அரசின் நிர்வாகம் செயலிழந்து இருப்பதால் மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். எனவே எனது எழுச்சி பயணம் தள்ளி வைக்கப்படுகிறது. பல இடங்களில் சாலையில் வெள்ளமென மழை நீர் தேங்கி நிற்பதையும், அதனால் வீடுகளை விட்டு வெளியே கூட வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பதையும் காணும் போது அதிமுக அரசை இனியும் நம்பி பயனில்லை என முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
இந்த கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, ஏற்கனவே அறிவித்தது போல மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
நிர்வாக ரீதியாக தோல்வியடைந்து விட்ட அதிமுக ஆட்சியை நீக்கும் எழுச்சிப் பயணம் வேறு ஒரு தேதியில் திட்டமிட்டபடி நடைபெறும்’’ இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24.10.17 அன்று வெளியான செய்தியை படிக்க...