mk-stalin | mp-kanimozhi | lok-sabha | திமுக எம்.பி. கனிமொழி உள்பட 15 மக்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு மு.க. ஸடாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “திமுக எம்.பி. கனிமொழி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் ஜனநாயக விரோதமானது.
இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உணர்வை குழிதோண்டி புதைக்கிறது. மத்திய அரசின் சகிப்புதன்மையற்ற அணுகுமுறை கண்டிக்கதக்கது” எனக் கூறியுள்ளார்.
மேலும், “எம்.பி.க்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்குவதுதான் நாடாளுமன்றத்தின் புதிய விதிகளா? எனக் கேள்வியெழுப்பிய அவர், ஜனநாயக கோவிலில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுக்கு பதில் தேடும் மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.க்களின் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும்; நாடாளுமன்றம் என்பது விவாத மேடையாக இருக்க வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகளை வாயடைக்க வைப்பதாக இருக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், மக்களவையில் பார்வையாளர்கள் கேலரியில் இருந்த இருவர் வண்ண புகை குப்பிகளுடன் உறுப்பினர்கள் இருக்கைக்கு வந்தனர்.
இதனால் மக்களவையில் மஞ்சள் நிற வண்ண புகை பரவியது. இந்தச் சம்பவம் நடந்தபோது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பல்வேறு நபர்கள் அவையில் இருந்தனர்.
இந்த நிலையில், இந்தப் பாதுகாப்பு மீறலுக்கு எதிராக திமுக எம்பி கனிமொழி உள்பட எதிர்க்கட்சியை சேர்ந்த நபர்கள் குரல் கொடுத்தனர்.
அப்போது இது தொடர்பாக அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதாக கனிமொழி உள்பட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“