சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவு விழாவான இன்று (ஜன.8,2024) உரையாற்றினார்.
அப்போது, “உலகமே வியக்கும் வண்ணம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, இதயத்தில் இடம்பிடித்துவிட்டார்” எனறார்.
தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், “நான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்பு இதுவரை 44 தொழில்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன்.
27 தொழில்சாலைகளை திறந்துவைத்துள்ளேன். சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடு கிடைக்க உள்ளது.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில்தான் அதிக முதலீடுகள் வந்துள்ளன. இந்தப் புதிய முதலீடுகள் மூலமாக கிட்டத்தட்ட 14.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன” என்றார்.
இதையடுத்து, “இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் தொழில் பாய்ச்சலாக அமைந்துள்ளது” என்றார். மேலும், “சென்னையில் நடைபெற்ற இந்த உலக முதலீட்டாளர்கள மாநாட்டின் பெருமை என்றென்றும் பேசப்படும்” என்ற மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டின் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “தாம் தொடர்ந்து முதலீடுகளை கவனிப்பேன்” என்றும் அவர் கூறினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்றும் (ஜன.7,2024) இன்றும் (திங்கள்கிழமை) ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கு பெற்றார்கள்.
இதற்கு முன்பு 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“