திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 7ம் தேதி ஆரம்பிப்பதாக இருந்த எழுச்சி பயணம் தள்ளிப்போகிறது. பொங்கலுக்குப் பின்னரே இந்த பயணம் தொடங்கப்படும் என கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் நமக்கு நாமே என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்தார். சில இடங்களில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். சில இடங்களில் டூவிலரில் சென்றார். விவசாயிகள், நெசவாளர்கள், பீடிதொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து உரையாடினார். இது தேர்தலில் எதிரொலித்தது. திமுக 89 இடங்களை வெல்ல இந்த பயணம் உறுதுணையாக இருந்தது.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ‘வரும் நவம்பர் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம் செல்ல திட்டமிட்டு இருப்பதாக’ அறிவித்தார். நமக்கு நாமே பயணத்தின் போது, மக்களை நாம் சென்று சந்தித்தோம். இப்போது மக்கள் நம்மை வந்து சந்திக்குமாறு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெறுகிறது. கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு எழுச்சி பயணத்தை தொடங்கி வைப்பதாக இருந்தது. முதலில் வருவதாக ஒப்புக் கொண்ட மம்தா பானர்ஜி, கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து திமுக தலைமைக்கு தகவல் தெரிவித்த அவர், வேறு ஒரு தேதியில் வைத்துக் கொண்டால் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.
இது குறித்து ஆலோசித்த திமுக தலைமை, நவம்பர் மாதத்தில் மாற்றுத் தேதிகளை தேடியது. நவம்பர் மாதம், தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால், டிசம்பர் மாதம் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம் என்று விவாதிக்கப்பட்டது. மார்கழி மாதம் புதிய திட்டம் எதுவும் தொடங்க வேண்டாம் என்று மூத்த நிர்வாகிகள் தடுத்ததால், ஜனவரியில் எழுச்சி பயணத்தை தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. எனவே பொங்கலுக்கு பின்னரே எழுச்சி பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குவார் என்கிறார்கள்.
கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் அகில இந்திய தலைவர்களை அழைத்து பிரமாண்டப்படுத்தினர். அதே போல எழுச்சி பயணத்தின் போது, ஊழலுக்கு அப்பாற்பட்ட தேசிய தலைவர்களை அழைத்து முக்கிய் ஊர்களில் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.