எம்.கே.சூரப்பா நியமனம், ஆளுனரின் தன்னிச்சையான முடிவு என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். இது வருத்தம் அளிப்பதாகவும் அமைச்சர் தனது பேட்டியில் கூறினார்.
எம்.கே.சூரப்பா என்கிற கல்வியாளரை, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு இசை பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு வெளிமாநில கல்வியாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், எம்.கே.சூரப்பா 3-வது வெளிமாநில துணைவேந்தர்.
எம்.கே.சூரப்பா நியமனத்தை வாபஸ் பெறவேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இன்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது..
துணைவேந்தர் நியமனத்தைப் பொறுத்தவரை, தேடுதல் குழு அமைப்பதுடன் அரசு பணி முடிந்து விடுகிறது. அந்தக் குழுவினர் தங்கள் பரிந்துரையை ஆளுனரிடம் சமர்ப்பிப்பார்கள். ஆளுனர், துணைவேந்தரை நியமனம் செய்கிறார். திமுக ஆட்சிக் காலமாக இருந்தாலும் அதிமுக ஆட்சி காலமாக இருந்தாலும் இதுதான் நடைமுறை.
ஆனால் தமிழ்நாட்டில் நோபல் பரிசு பெற்றவர்கள் இருக்கிறார்கள். அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் இருந்திருக்கிறார்கள். எனவே வெளிமாநிலத்தை சேர்ந்தவரை தன்னிச்சையாக நியமனம் செய்தது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.