பேராசிரியை நிர்மலா தேவியின் பின்புலம் குறித்து விசாரணை - துணைவேந்தர் செல்லதுரை

பேராசிரியர் நிர்மலா தேவியின் பின்புலம் என்ன

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா. இவர் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவது வழக்கம். அப்படி சென்ற போது, அங்குள்ள உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களுடன் , பணமும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறி 4 மாணவிகளை நிர்மலா கன்வின்ஸ் செய்யும் ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு மாணவிகள், தங்களுக்கு விருப்பமில்லை என்றும், இது பற்றி பேசவேண்டாம் என்று மறுக்கின்றனர். இருப்பினும், அவர்களைத் தொடர்ந்து கட்டாயப்படுத்தும் விதத்தில் பேராசிரியை நிர்மலா பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து, பேராசிரியை நிர்மலாவை 15 நாள் சஸ்பெண்ட் செய்தது கல்லூரி நிர்வாகம். மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நிர்மலா, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்தார்.

அதன் பின்னர் கல்லூரி முதல்வர் பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை இதுகுறித்து பேட்டி அளிக்கையில், “மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகளிடம் பேராசிரியர் நிர்மலா தேவி தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் நலனில் நிர்வாகம் அக்கறை செலுத்திவருகிறது. இதுவரை இதுபோன்ற புகார்கள் வந்ததில்லை. மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவியின் பின்புலம் என்ன என்பதை அறிய பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

×Close
×Close