கோவையில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள ஆட்களை அழைத்து வர, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதுபோன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஓகி புயலால் கன்னியாகுமரி மீனவர்கள் சிக்கித்தவிக்கும் நிலையில், மீனவ குடும்பத்தினர் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்நிலையில், இவற்றை பொருட்படுத்தாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மற்றொரு சர்ச்சையும் கிளம்பியுள்ளது.
சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு ஆட்களை அழைத்து வர, தன் இல்லத்தில் தொண்டர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதுபோன்ற வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில், சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ், பணத்தை எண்ணி தொண்டர்களுக்கு தருகிறார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ.கனகராஜை தொடர்புகொண்டபோது அவரது உதவியாளர் ஒருவர் கூறியதாவது, “ஆட்களை அழைத்துவர தொண்டர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுவது பொய். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக பல்வேறு ஊர்களிலிருந்து தொண்டர்கள் பேருந்துகளில் வரவழைக்கப்படுவர். அதன்பின்பு, பேருந்துகளுக்கான டீசல் செலவை கணக்கிட்டு அதனை ஊர் நிர்வாகிகளுக்கு வழங்கும் வீடியோதான் அது.”, என கூறினார்.
மேலும், அந்த வீடியோவில் இருக்கும் பெட்டிகளில், விழாவுக்கு வரும் தொண்டர்களுக்காக தயார் செய்யப்பட்ட உணவுதான் எனவும், இம்மாதிரியான விழாக்களுக்கு எம்.எல்.ஏ. கனகராஜ் தன் சொந்த செலவிலேயே சாப்பாடு தயார் செய்து வழங்குவது வழக்கம் எனவும் கூறினார்.
இதனிடையே, இந்த விழாவுக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துவர பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.