அடுத்த வழக்கில் கைது செய்ய தேடி வந்த போலீஸ்: கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு திடீர் நெஞ்சுவலி!

கருணாஸ் திடீரென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

karunas Hospitalised: கருணாஸ் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னொரு வழக்கில் கைது செய்ய போலீஸ் தயாரான வேளையில் அவர் மருத்துவமனையில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராக இருக்கிறார். கடந்த தேர்தலில் அதிமுக.வின் இரட்டை இலை சின்னத்தில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார். அண்மையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து திரும்பிய கருணாஸ், பின்னர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக காரசாரமாக பேசத் தொடங்கினார்.

எம். எல். ஏ கருணாஸூக்கு நெஞ்சு வலியா?

கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரியை கடுமையாக விமர்சனம் செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கருணாஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனிடையே சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிகளின் போது ரசிகர்களை கருணாஸ் தாக்கியதாக கருணாஸ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த இரு வழக்குகளில் இருந்தும் அவருக்கு ஜாமீன் கிடைத்து எம்.எல்.ஏ கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களும் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் நேற்று (2.10.18) இரவு, புளியங்குடி டிஎஸ்பி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு தேடி சென்றனர். இதுக்குறித்த காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவு நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டபோது மரியாதை செலுத்த சென்ற கருணாஸுக்கும் , மற்றொரு அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக கருணாஸ் உட்பட 32 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வழக்கில் கருணாஸை கைது செய்வதற்காகத் தான் நேற்று இரவு கருணாஸ் வீட்டிற்கு போலீசார் சென்றனர்.ஆனால் அப்போது கருணாஸ் வீட்டில் இல்லாததால் போலீசார் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை எம். எல். ஏ கருணாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் தன்னை கைது செய்ய வருவதை அறிந்த கருணாஸ் திடீரென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருக்கும் கருணாஸ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே ஜாமீன் நிபந்தனை அடிப்படையில் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் கருணாஸ் கையெழுத்திட வேண்டும். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, உரிய மருத்துவ ஆவணங்களை அவரது வழக்கறிஞர்கள் காவல் நிலையங்களில் சமர்ப்பித்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close