தமிழக அரசு மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார். முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சென்னை தியாகராய நகர் துணை ஆணையரை கொலை செய்ய கருணாஸ் கூலிப்படையை ஏவி விட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த போலீசார் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜாமின் கோரி நடிகர் கருணாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
எம்.எல்.ஏ கருணாஸ் ஜாமின் மனு குறித்து இன்று தீர்ப்பு :
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் தமிழக முதலமைச்சரையும், காவல்துறையையும் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கருணாசை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். நடிகர் கருணாஸ் பேசிய அம்சங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.
மேலும் கருணாசை காவலில் எடுத்து விசாரிக்கவேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்தில் நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணத்தில் பல பகீர் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கருணாஸ் என்ன சொன்னார்? காவல்துறை ஏன் அவரை விசாரிக்க நினைக்கிறது? மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ், தி.நகர் துணை ஆணையர் அரவிந்த்தை கடுமையாக விமர்சித்தார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது கை வைத்தால், காலை உடைப்பேன் என்று அவர் பேசியுள்ளார். தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம், ”நீ கொலை கூட பண்ணு, அத என்கிட்ட சொல்லிட்டு பண்ணு” என்று கருணாஸ் கூறியதையும் போலீசார் அந்த பிரமாணபத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, கருணாசிடம் சொல்லிவிட்டு, கொலைகள் செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரிக்கவும் போலீசார் அவரை காவல் எடுக்க திட்டமிட்டனர். கொலை செய்ய தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை தூண்டும் வகையில் கருணாஸ் பேசியதை போலீசார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இப்படி கருணாஸ் தூண்டிவிட்டதால், எத்தனை கொலைகள் நடந்துள்ளன என்பது குறித்து விசாரிக்கவும் கருணாஸை காவலில் எடுக்க மனுதாக்கல் செய்தனர்.
ஒருபக்கம் துணை ஆணையரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளாதா? கொலை செய்ய நிதி உதவி செய்வது யார்? என்றெல்லாம் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின்துரை தள்ளுபடி செய்துவிட்டார். இந்நிலையில் ஜாமின் கோரி நடிகர் கருணாஸ் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வந்தது. முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.