சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரமுகர்களில் ஒருவர் எம்.எல்.ஏ கருணாஸ். இவர் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் மு.க. ஸ்டாலினை திடீரென சந்தித்தார்.
கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றிருந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
எம்.எல்.ஏ கருணாஸ் - மு.க. ஸ்டாலின் சந்திப்பு :
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை கோபாலபுரம் வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கருணாஸ் சந்திப்பு நடந்தது. இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஸ்டாலினுடன் கருணாஸ் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்யும் டிடிவி தினகரன் மற்றும் திமுகவுக்கு ஆதரவாக நடந்து கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், “சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுக தலைவரிடம் முறையிட்டேன் என்னை சிலர் திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் இயக்குகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் என்னை இயக்குவது ஒருவர் மட்டுமே அது முத்துராமலிங்க தேவர் மட்டுமே” எனக் கூறினார்.