அ.தி.மு.க-வில் மீண்டும் இணைய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் விரும்பினால், அவர் சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே திருவாதவூரில் அ.தி.மு.க சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினரான ராஜன் செல்லப்பா கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் அவர் பங்கேற்றார்.
அப்போது, ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வில் இணைவது குறித்து பரிசீலனை செய்யப்படுமா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "அ.தி.மு.க-வில் இணைய விரும்பினால், ஆறு மாதங்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் அமைதியாக இருக்க வேண்டும்.
எந்த விதமான சட்ட வழக்குகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் இருத்தல் அவசியம். இதன் தொடர்ச்சியாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை செய்து முடிவு எடுப்போம்" எனக் கூறினார். இந்த பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.