காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநிலப் பொருளாளரும், எம்.எல்.ஏ.,வுமான ரூபி மனோகரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையும் படியுங்கள்: சிறை கைதிகள் உறவினர்களிடம் பேச இன்டர்காம் வசதி
இது தொடர்பாக விளக்கம் அளிக்க கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. அதில் வருகிற 24 ஆம் தேதி (இன்று) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டது.
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டும், மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தும், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற விரும்பதகாத நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்க கடிதம் அனுப்பியிருந்த நிலையில், ரூபி மனோகரன் கால அவகாசம் கேட்டும், கருத்துக்களைக் குறிப்பிட்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ரூபி மனோகரன் குறிப்பிடும் கருத்துக்கள் காரணம் ஏற்புடையது அல்ல. அடுத்த நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரூபி மனோகரன், இந்த இடைநீக்கம் நடவடிக்கை தவறானது. காங்கிரஸ் தலைமை என் மீது எடுத்த நடவடிக்கை தவறானது. தேசிய கட்சியில் முறையாக விசாரிக்காமல் முடிவெடுத்துள்ளார்கள். நான் தேதி மட்டுமே மாற்றிக் கேட்டேன். விளக்கம் கட்டாயம் கொடுப்பேன். என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியா? என்பதை கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும். தமிழக காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு இறுதி முடிவு அல்ல. அகில இந்திய காங்கிரஸ் தலைமையே இறுதி முடிவெடுக்கும். காங்கிரஸ் தலைமை எடுக்கும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக் கொள்ள தயார்.
கட்சியில் இருந்து என்னை தற்காலிகமாக நீக்கியிருப்பது வேதனையளிக்கிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாத சூழல் உள்ளது. காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராக அவகாசம் கோரியிருந்தேன். கட்சியை பற்றியோ, தலைவர்கள் பற்றியோ நான் எந்த குறையும் சொல்ல முடியாது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவருடன் இணைந்து செயல்பட்டுள்ளேன், என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil