கோவை நேரு விளையாட்டரங்கில் மூன்றுக்கு மூன்று பேர் மட்டுமே பங்கேற்கும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடர் நேற்று துவங்கி வருகிற 2-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
Advertisment
மார்ட்டின் குழுமம், பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், சிற்றுளி அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடைபெறும் இந்த போட்டி தொடரில் மாநிலம் முழுவதிலுமிருந்து 151 அணிகள் பங்கேற்றுள்ளன. 10- 59 வயது வரையில் 6 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே நடைபெறும் போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற உள்ளது.
இதே போல் இன்று 5 பேர் கொண்ட தென்னிந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியும் துவங்க உள்ளது. அதில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா என 4 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற துவக்க விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, கூடைப்பந்து விளையாடி, போட்டிகளை துவக்கிவைத்து வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி வேலுமணி, "அம்மா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி காலத்தில் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளித்து விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார். அது மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளையும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி ஊக்குவித்தார்.
இதேபோல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு அரங்கங்கள் மற்றும் உள் விளையாட்டு அரங்கங்கள் புனரமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆட்சியில் எதுவுமே செய்யாமல் விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அரசாக தமிழக அரசு இருக்கின்றது" என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், புதிதாக தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி பதவி ஏற்றதற்கு வாழ்த்து சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. ஏனென்றால் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. கிராமப் புறங்களில் கடந்த ஆட்சி காலங்களில் கொண்டு வந்த உள் விளையாட்டு அரங்கங்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொண்டு வந்த பூங்காக்கள் கூட சரியாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி பயனற்று கிடப்பதாகவும் தற்போதைய ஆட்சி மக்களுக்கு ஏதும் செய்யாத ஆட்சியாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“