எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவது வருத்தமே! - எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம்

எங்களுக்கு பொறாமை இல்லை. சிறிய வருத்தம் கலந்த ஏமாற்றம்

மத்திய அரசின் 2015-2016ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் ரூ.1,600 கோடியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிப்பட்டி, ஈரோடு பெருந்துறை, மதுரை தோப்பூர் ஆகிய இடங்களை பரிந்துரை செய்தார். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நான்கு வழிச்சாலை, 200 ஏக்கர் நிலம், தண்ணீர் வசதி, தடையில்லா மின்சாரம், ரயில்வே நிலையம், மிக அருகில் சர்வதேச விமானப்போக்குவரத்து வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மதிப்பீடு செய்யப்பட்டு 5 இடங்களில் ஒன்றை தேர்வு செய்வதாக கூறப்பட்டது.

இதில், 7 கி.மீ., தொலைவில் மதுரை விமானம் நிலையம், 2 கி.மீ., தொலைவில் என்எச்-7 நான்கு வழிச்சாலை, மிக அருகிலே திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் மதுரை ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மதுரை பெற்றிருந்தது.

இருப்பினும், இத்திட்டம் தொடங்குவதில் தாமதம் நீடித்துக் கொண்டே சென்றது. தமிழக அரசு மதுரையை காட்டிலும், தஞ்சையில் உள்ள செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமைவதற்கு ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டது.

அதேசமயம், ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும் எய்ம்ஸ் அமைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது. பெருந்துறையில் மருத்துவக்கல்லூரியின் பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அந்த இடம்தான் என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தார். சட்டசபையிலும் இது பற்றி பேசினார்.

இந்நிலையில், பல இழுபறிகளுக்கு பிறகு, மதுரை தோப்பூரையே மத்திய அரசு டிக் செய்துள்ளது. இதுகுறித்து எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் கூறுகையில், “பெருந்துறை பகுதியில் அமைய வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூர் பக்கம் அமைய உள்ளதால் எங்களுக்கு பொறாமை இல்லை. சிறிய வருத்தம் கலந்த ஏமாற்றம் தான். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதன் மூலம் அந்த பகுதி மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள்.

அந்த வகையில் எனது தொகுதியில் மருத்துவமனை அமைந்திருந்தால் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய கொங்கு மண்டல மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை பக்கம் சென்றுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பயன் பெறுவார்கள். எப்படி பார்த்தாலும் மகிழ்ச்சி அடைவது தமிழக மக்கள் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close