தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு இல்லை; தேர்தலை சந்திக்கிறோம் - டிடிவி தினகரன் அறிவிப்பு

மண் குதிரை யார் என்பதை, எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் கடந்த அக்.25ம் தேதி தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கிய சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும், சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்றும், தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை எனவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த 18 பேரிடமும், டி.டி.வி. தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்று விவாதிக்கப்பட்டது. அப்போது மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும், மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்றும் இரு தரப்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

இருப்பினும், ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அரசு கொறடா ராஜேந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது

இந்தச் சூழ்நிலையில், டிடிவி தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும், தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை என்றும், அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேட்டபோது, ‘மண் குதிரை யார் என்பதை, எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள்’ என்று தினகரன் தெரிவித்தார்.

டிடிவி தினகரனின் இந்த அறிவிப்பால், அமுமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ‘தேர்தலை சந்தித்து நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்’ என்றே பரவலாக தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், டிடிவியின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி & கோ-வா அல்லது தினகரனா என்ற முடிவை மக்கள் மன்றத்திற்கு கொண்டுச் சென்றுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close