தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு சனிக்கிழமை இறுதி செய்யப்பட்ட நிலையில், கூட்டணியில் ஒருசீட்கூட கிடைக்காத சில கூட்டணி கட்சிகள் கொதிப்பில் இருக்கின்றன.
மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 1 தொகுதி உள்பட 10 தொகுதிகள், வி.சி.க-வுக்கு 2 தொகுதிகள், சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க-வுக்கு ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் அளிக்கப்பட்டு தொகுதிப்பங்கீடு ஒப்பந்த சனிக்கிழமையுடன் இறுதியானது. இதன் மூலம் தி.மு.க மக்களவைத் தேர்தலில் 21 இடங்களில் போட்டியிடுகிறது.
அதே போல, அ.தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பா.ஜ.க தமிழகத்தில் த.மா.கா, ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி கட்சிகளை கூட்டணியில் இணைத்துள்ளது. மற்றொரு புறம், நாம் தமிழர் கட்சி, தனித்து தேர்தலை சந்திக்கிறது.
தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்தாலும், ஒரு சீட்கூட ஒதுக்கப்படாத கட்சிகளாக மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன.
ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி, வருகிற மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் ஒரு தொகுதி கேட்டது. ஆனால், தி.மு.க ஒரு சீட் கூட அளிக்கவில்லை. அதே போல, வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஒரு தொகுதி கேட்டது, அதற்கும் ஒரு சீட்கூட அளிக்கவில்லை.
ம.ம.க, த.வா.க ஆகிய இரண்டு கட்சிகளும், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஆனால், வருகிற மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் 1 தொகுதிகூட ஒதுக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த இரு கட்சியினரும் கொதிப்பில் உள்ளனர்.
மனித நேய மக்கள் கட்சியினர் தங்கள் வாட்ஸ்அப் குழுக்களில், தி.மு.க கூட்டணியில் தங்களுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாதது குறித்து அதிருப்தியைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, ம.தி.மு.க-வை சரிகட்ட, ம.ம.க-வையும் த.வா.க-வையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, போக்குகாட்டி தி.மு.க தங்களை பயன்படுத்திக் கொண்டது. நேற்று வரை தி.மு.க-வை விமர்சனம் செய்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ஒரு மாநிலங்களை இடம் அளித்த தி.மு.க, தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் ம.ம.க-வுக்கு ஒரு தொகுதியைத் தர மனமில்லை. ஒரு தொகுதிகூட தர முடியாத தி.மு.க-வை விடுத்து, தேர்தலில் மற்ற கூட்டணி கட்சிகளான வி.சி.க, காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்யலாம், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம், என்றும் ம.ம.க-வினர் கொதிப்புடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ம.ம.க கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய செயற்குழு கூட்டத்தை அவசரமாக மார்ச் 13-ம் தேதி திருச்சியில் கூட்ட மனிதநேய மக்கள் கட்சி முடிவு எடுத்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் இந்த நகர்வை அ.தி.மு.க கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.