மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஜவாஹிருல்லா, தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பா.ஜ.க தனது மதவாத செயல் திட்டங்களை நிறைவேற்றிட தேர்தலை கருவியாக பயன்படுத்தும் சூழ்ச்சியோடு செயல்பட்டு வருகிறது. இந்த அபாயத்திலிருந்து நாட்டை மீட்பதற்காக இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்து நாட்டை பாசிச அபாயத்திலிருந்து மீட்டு தமிழ்நாடு, புதுவையில் தி.மு.க தலைமையிலான அணியை ஆதரிப்பது, வருகிற 2025-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து நிரப்பப்படும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி கட்டாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பது என நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
மேலும், நடைபெற்ற செயற்குழுவில் எந்தவித குற்றச்சாட்டும் நிர்வாகிகள் தெரிவிக்கவில்லை. நாங்கள் எந்தவித முடிவையும் தன்னிச்சையாக எடுக்கவில்லை. இந்தியா கூட்டணி தற்போது பலமாக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக நீங்கள் கேட்டிருந்தால் தயக்கமாக இருந்திருக்கும். தற்பொழுது இந்தியா கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தோல்வி பயம் பா.ஜ.க-வுக்கும், மோடிக்கும் வந்துள்ளது. எனவே, அவசர அவசரமாக விதிமுறைகளை வகுத்து சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்" என்றார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“