Advertisment

அரசியலும் மதமும் கலந்தால் நாடு உருப்படாமல் போய்விடும்: ஈரோட்டில் கமல்ஹாசன் பிரசாரம்

நாடு காப்பது என்பது வீரம். ஆனால், பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் ஒருவரிடம் வீரத்தைப் பற்றி பேசி என்ன பிரயோஜனம்? - கமல்ஹாசன் தாக்கு

author-image
WebDesk
New Update
Kamal Erode.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் தனது பிரச்சாரத்தை நேற்று (மார்ச் 29) தொடங்கினார். ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, வீரப்பன்சத்திரம் பகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “நாட்டை காப்பாற்ற கட்சி வரைகோடுகளை அழித்து விட்டு மக்கள் நீதி மய்யத்தினர் இங்கு வந்துள்ளனர். 

Advertisment

ஈரோட்டில் நான் பிரச்சாரத்தைத் தொடங்க இரண்டு காரணங்கள் உண்டு. பெரியார் முதல் காரணம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது நீங்கள் காட்டிய அன்பு இரண்டாவது காரணம். தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல, தமிழ்நாட்டின் வியூகம்.

தமிழகத்தின் வளர்ச்சி என்பது பல தலைவர்கள் போட்ட அடித்தளம். மதிய உணவுத் திட்டம் என்பது காமராஜர் தொடங்கி எம்.ஜி.ஆர் அதைத் தொடர்ந்து இன்று அதன் நீட்சியாக காலை உணவுத் திட்டமாக தமிழக முதல்வரால் நிறைவேற்றப்படுகிறது. இதற்கெல்லாம் உரிமையை யாரோ மையத்தில் இருந்து கொண்டாட முடியாது. அப்படி கொண்டாட வேண்டுமானால், இங்குள்ள மையத்திற்கு வாருங்கள்.

நாம் (தமிழகம்) ஒரு ரூபாய் வரி கொடுத்தால், 29 பைசாதான் திரும்ப வருகிறது. ஆனால், இங்கு வேலை தேடி வரும் தொழிலாளர்களின் மாநிலங்கள், ஒரு ரூபாய் கொடுத்தால் ஏழு ரூபாய் கிடைக்கிறது. அப்படி கொடுத்தும் அவர்கள் இங்கு வேலை தேடி வருகின்றனர்.

தமிழன் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டான் என்பது பொய். வடநாட்டில் கட்டபொம்மன், சிதம்பரம், காமராஜர் என்று யாராவது பெயர் வைத்து இருக்கிறார்களா? எங்கள் ஊருக்கு வந்தால் காந்தி, நேரு, போஸ், படேல் என பலருக்கும் பெயர் வைத்துள்ளோம். நீங்கள் இப்போதுதான் படேலுக்கு சிலை எழுப்பினீர்கள். நாங்கள் எங்கள் இதயத்தில் எப்போதே படேலுக்கு சிலை எழுப்பி விட்டோம். எப்படியாவது இந்த நாட்டை பிடிக்க வேண்டும் என்பது அவர்களின் வெறி. நாடு காப்பது என்பது வீரம். ஆனால், பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் ஒருவரிடம் வீரத்தைப் பற்றி பேசி என்ன பிரயோஜனம்? உண்மை எனும்போது தைரியமாக, பயப்படாமல் சொல்ல வேண்டும்.

இதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி வந்து நம்மை சுரண்டிவிட்டு சென்று விட்டனர். இப்போது மேற்கு இந்தியாவில் இருந்து ஒரு கம்பெனி வந்திருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தை அடக்க ட்ரோன் மூலம் கண்ணீர்புகை குண்டு வீசுகின்றனர். இந்தி மொழியை திணிக்கின்றனர்.

சாப்பாடு போட்டு பிள்ளைகளை வரவழைத்து நாங்கள் கல்வி கற்க வைக்கும்போது, அவர்கள் எங்கே படித்து முன்னேறி விடுவார்களோ என்று அவர்கள் எழுத முடியாத பரீட்சைகளைத் திணிக்கின்றனர். வெள்ள நிவாரண உதவியை மறுக்கின்றனர். கொடுக்க வேண்டிய பாக்கியைக் கேட்டால் கொடுத்ததே பிச்சைதானே என்று மத்திய அரசு சொல்கிறது. உலகத்திலேயே பெட்ரோல் விலை குறைந்தபோது, அதை இந்திய மக்களுக்கு இந்த அரசு லாபத்தில் விற்றதை மறந்து விடாதீர்கள். அரசியலும் மதமும் கலந்தால் நாடு உருப்படாமல் போய்விடும் என்பதற்கு ஐரோப்பா கண்டம் பெரிய உதாரணம்.

இங்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டை நேசிக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால், பொதுசிவில் சட்டம் மூலம், ஈழ போரினால் துன்பங்களை அனுபவிக்கும் தமிழர்களுக்கு ஓரவஞ்சனை செய்கின்றனர். மணிப்பூரில் எனது சகோதரி அவமானப்படுத்தப்படும் போது நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நான் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.கருப்பு பண முதலைகளை ஒழிப்போம் என்று சொன்னவர்கள், மீன்களைப் போன்ற மக்களைக் கொன்று விட்டனர்.  

இங்குள்ள அரசு செயல்படுத்தும் காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்ற நலத்திட்டங்களை வடநாட்டில் ஏன் செயல்படுத்தவில்லை. 29 பைசாவை வைத்து நாங்கள் இதை செய்யும்போது, 7 ரூபாய் வைத்து ஏன் பீஹாரில் செய்ய முடியவில்லை. எங்களுக்கு வழங்கும் 29 பைசாவை எப்படி 20 பைசா ஆக்கலாம் என்று யோசிக்காதீர்கள்.

திமுக அரசு ஏழைகளுக்கான அரசு என்பதை நான் உணர்கிறேன். அது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆதரிக்கிறோம். நம் மீது கை வைப்பவர்களை எதிர்க்க ஒரு விரல் மை போதும். எங்களின் குரல் நியாயத்திற்காக ஒலித்துக் கொண்டு இருக்கும். அது எந்த கட்சி செய்தாலும் அதை பாராட்ட தயக்கம் இல்லை. ஏன் செய்யவில்லை என்று கேட்போம், இன்னும் செய்யுங்கள் என்று சொல்லுவோம்” என்றார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Lok Sabha Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment