திருச்சி மாவட்டத்தில் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கிகள் பற்றாக்குறையாக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர். கிஷோர்குமார், டி.ஜி.பி-க்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள மனுவில், "என்ன தான் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இந்தோனேசியாவிலுள்ள தீவிரவாதியை பிடிக்க முடிந்தாலும், திருச்சி தில்லை நகர் முதல் கிராசில் செயின் ஸ்னாட்ச் செய்யும் திருடனை பதினொன்றாவது கிராசில் மடக்கி பிடிக்க போலீசாருக்கு பேருதவியாக இருப்பது என்னவோ நமது உள்ளூர் வாக்கி டாக்கி தான்.
ஆனால் இந்த வாக்கி டாக்கிகள் திருச்சி மாநகரில் பெரும்பாலான காவல் நிலையங்களில் பயன்படுத்த முடியாத அளவிற்கு செயலிழந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
திருச்சி மாநகரில் 14 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் மட்டுமல்லாது, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஒழுங்கு பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, விபச்சார தடுப்பு பிரிவு, சைபர் குற்ற தடுப்பு பிரிவு உள்ளிட்ட ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் பிரத்யேக வாக்கி டாக்கிகள் பயன்பாட்டில் உள்ளது.
இந்த வாக்கி டாக்கிகள் அவ்வப்போது பழுதாகும்போது திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள டெக்னிக்கல் செக்சனில் கொடுத்து பழுது நீக்கி தரப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வாக்கி டாக்கிகளுக்கு பதிலாக புதிதாக வாக்கி டாக்கி வழங்காமல் உள்ளதாக காவல்துறையினரின் மத்தியில் குற்றசாட்டு எழுந்துள்ளது.
உதாரணத்திற்கு ஒரு காவல் நிலையத்தில் ஐந்து பீட்கள் உள்ளது என்றால் ஐந்து வாக்கி டாக்கிக்கு பதிலாக, ஒன்று (அ) இரண்டு வாக்கி டாக்கிகள் மட்டுமே சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு அவசர நிலையில் தகவலை ஒரே நேரத்தில் காவல் ஆணையர் முதல் கடைநிலை காவலர் வரை உடனடியாக சென்று சேர்ப்பது தான் வாக்கி டாக்கியின் சிறப்பம்சம்.
ஆனால், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு காவல்துறை தலைவர் அந்தஸ்தில் செயல்படுவதோடு பல லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஒரு மாநகரின் காவல்துறையில் வாக்கி டாக்கிகளின் குறைபாடு வேதனையளிக்கிறது. மேலும் சாமானிய குடிமகனாக யோசிக்கும் பொழுது மிகப்பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.
எனவே, தமிழக முதல்வரின் சீறிய தலைமையின் கீழ் செயல்படும் தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு இயக்குநர் சங்கர்ஜிவால், திருச்சி மாநகர காவல் துறையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வாக்கி டாக்கி பற்றாக்குறையை விரைந்து சரிசெய்து, திருச்சி மாநகர பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“