பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூடாது என்பது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்திய 35-வது மாநாட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "இந்த மாநாடு புதிய அமைப்பு தொடங்கிய எனக்கான பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். நானும் ஒரு சிறு வணிகன் தான். அரசியல்வாதியாக இங்கு வரவில்லை. தமிழக அரசியலில் இழந்த மாண்பை மீட்டெடுக்கவேண்டும். தமிழகத்தை நல்ல நிலைக்குக் கொண்டு செல்வதை நினைவுபடுத்தவே இந்த இடத்துக்கு வந்தேன். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறைகளுடன் வணிகத்துறையும் இணைவது அவசியம். நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள்.
நாம் தான் அதிகம் வரி செலுத்துபவர்கள். விசில் ஆப்-ஐ வணிகர் சங்கத்தினரும் பயன்படுத்த வேண்டும். நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் போடும் தீர்மானங்கள் கோரிக்கைகளை வாரா வாரம் செய்யலாம், மாதா மாதம் செய்யலாம் வாருங்கள். கிராம சபைகளில் வணிகர்களும் பங்கேற்க வேண்டும் . கிராம சபை தீர்மானங்கள் நாடாளுமன்ற தீர்மானங்களாக மாறும். தேவையற்ற வேலை நிறுத்தங்களை செய்ய மாட்டோம் என்ற வணிகர் சங்க மாநாட்டு தீர்மானம் மிகவும் வரவேற்கத்தக்கது.
பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாது என்பது மக்கள் நிதி மய்ய கொள்கை. மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் பெரும் ஊர்வலமாக சென்றால் அவசரமாக மருத்துவமனைக்கு செல்பவரின் நிலை என்ன என யோசியுங்கள். பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்து மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது" என கமல்ஹாசன் பேசினார்.