பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்ட தினமான இன்று பஞ்சாயத்துராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "கிராம சபை என்பது போர் அடிக்கும் ஒரு நிகழ்ச்சியாக நகரத்தில் வாழ்பவர்களுக்குத் தோன்றலாம். இது வயலும், வாழ்வும்.. ஏன் நகரத்தில் வாழ்பவர்களும் சம்பந்தப்பட்டது. கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டுக்கு மூன்று நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதே கேள்விக்குறி.
கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ. 1 முதல் ரூ. 5 கோடி வரை நிதியானது கிராம மக்கள் தொகை, கிராம பஞ்சாயத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. நம்முடைய தமிழகத்தில் 12,526 கிராமங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் கோடிகள் மூலம் பெருக்கிப் பார்த்தால் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி. 25 ஆயிரம் கோடி 5 ஆண்டுகள் என்றால் எவ்வளவு என நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். நகரத்திலே பிறந்து நகரத்திலே ஜொலிப்பவர்கள் கொஞ்சம் பேர் தான், மீதி அனைவருமே கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான்.
முக்கால்வாசிப்பேர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான், இங்கு நடப்பவற்றை கிராமத்தில் இருக்கும் உங்கள் உறவினர்களிடம் கொண்டு செல்லுங்கள். கிராம சபை கூட்டங்கள் காலகட்டத்திற்கு ஏற்ப மாறிவிட்டது, கிராம சபை கூட்டங்கள் நடந்தே ஆக வேண்டும். கிராமத்தினர் முன்னிலையில் வைத்து கணக்கு பார்க்க வேண்டும், அப்படி செய்யும் போது ஊழல் ஒழியும். ஊழல் ஒழிப்பு என்பது ஒரே நாளில் செய்வது அல்ல முதலில் குறைப்பு, பின்பு தடுப்பு அதற்கு பின்னர் தான் ஒழிப்பு. அதை செய்வதற்கான அற்புதமான கருவியை கையில் வைத்துக்கொண்டு செய்யாமல் இருக்கிறோம். 25 ஆண்டுகளாக இதுபோன்ற கிராம சபை கூட்டங்களை நடத்தி இருந்தால் தமிழகத்தின் முகம் மாறி இருக்கும். சில கட்சிகள், அமைப்புகள் முயன்று பார்த்தனர், ஆனால் மறந்தது மறந்தபடி அப்படியே இருக்கிறது. இப்போது நினைவுபடுத்தும் நாள் அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை செய்தே ஆக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தும் நாள் இது.
இங்கு மாதிரி கிராம சபை கூட்டத்தை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நடத்தி காட்டுகிறோம், இதனை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். கிராம பஞ்சாயத்து என்பது ஊற்று போல அதில் சாக்கடையை கலக்க விட்டுவிட்டோம், அதனை சுத்தம் செய்து மீண்டும் ஊற்று வரவைக்க வேண்டும். உடனடியாக எடுத்து நீரை பருகிவிட முடியாது அந்த தண்ணீரை வயலுக்கு விட்டுவிட்டு நாம் வாயில் வைப்பதை நல்ல தண்ணீராக வைப்போம். 25 வருடமாக நம் கையில் இருக்கும் நல்ல ஆயுதம் இது, அடிமட்ட மக்கள் வரை சென்று சேரும். மக்கள் நீதி மய்யம் மேல்தட்டு கட்சியில்லை, இங்கிருந்து தான் எங்கள் பலம் என்பதை நான் முழுவதுமாக உணர்ந்ததால் தான் இந்த நிகழ்ச்சியில் பங்குதாரராக வந்திருக்கிறேன். காவிரி விவகாரத்தில் கிராம பஞ்சாயத்தில் இருப்பவர்களின் குரல் வலுத்தால் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நாடாளுமன்றத்திற்கு இருக்கிறது. பிரித்தாளும் அரசியலால் கிராம பஞ்சாயத்துகள் வலுவிழந்துவிட்டன. இதே கிராம பஞ்சாயத்துகள் கர்நாடகத்திலும் இருக்கிறது, அவர்களிடமும் பேசினால் அவர்களுக்கும் புரியும் இந்த அளவில் இருந்து எடுத்துக்கொண்டு போனால் நிச்சயம் முடியும்.
மக்களுக்கான சிம்மாசனம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை வடிவமைத்து கொண்டுள்ளோம். புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நலமாக மக்கள் வாழும் பூமியை தயார் செய்து கொண்டுள்ளோம். உள்ளாட்சிதான் நமது பலம். எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.'' என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.