திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை என ஒவ்வொன்றாக உயர்த்தி வந்த நிலையில் தற்போது அரசு மருத்துவமனைகளிலும் கட்டண உயர்வை கொண்டுவந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி மேலும் கூறிய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளரான சு.ஆ.பொன்னுசாமி, "எனக்கு பல் வலி மற்றும் ஈறு வீக்கம் காரணமாக சென்னை, பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பல் சிகிச்சை மேற்கொள்ள இன்று (24.01.2023) காலையில் வந்திருந்தேன்.
வலி உள்ள பல்லின் ஈறு பாதிப்பு குறித்து அறிய எக்ஸ்ரே எடுக்க மருத்தவர் பரிந்துரை செய்ததால் அதற்கான கட்டணத்தை செலுத்த சம்பந்தப்பட்ட பிரிவிற்கு சென்ற போது எனக்கு முன்னால் வரிசையில் நின்றவர்களில் சிலர் புலம்பிக் கொண்டும், ஒரு சிலர் அரசை வசைபாடிக் கொண்டும் இருந்தனர். ஏன் என்று விசாரித்த போது தான் கடந்த மாதம் வரை இருந்த எக்ஸ்ரே கட்டணம் தற்போது பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது தெரிய வந்தது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை என ஒவ்வொன்றாக உயர்த்தி வந்த நிலையில், தற்போது அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே எடுப்பதற்கு குறைந்தபட்சமாக இருந்த ரூ.5 கட்டணத்தை ஜனவரி மாதம் துவக்கத்தில் சத்தமின்றி ரூ.20ஆக உயர்த்தியுள்ளதோடு, ரூ.5 மேற்பட்ட கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி ஏழை, எளிய மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
அரசு மருத்துவமனை என்பது வணிக நோக்கமற்று, ஏழை, எளிய மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருவதாகும். ஆனால் மக்களுக்கான அரசு என கூறிக் கொண்டு அத்தியாவசிய துறைகளிலும் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி தொடர்ந்து மக்களுக்கு விரோதமாக திமுக செயல்பட்டு வருவது சிறிதும் ஏற்புடையதல்ல.
இதனால் அரசு மருத்துவமனைகளில் சத்தமின்றி உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களை அரசு திரும்பப் பெற வேண்டும்", என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சு.ஆ.பொன்னுசாமி, "சென்னை, அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சத்தமின்றி உயர்த்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கட்டணம் தொடர்பான எனது பதிவு குறித்து அம்மருத்துவமனையின் பிரின்சிபால் மருத்துவர் விமலா அவர்கள் தொலைபேசி மூலம் சற்று முன் என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர் "பல் வலி காரணமாக வேர் சிகிச்சைக்கு 4நிலையில் XRay தேவை என்பதால் மறுபடியும் வரிசையில் நிற்பதை தவிர்க்க ஒருமுறை கட்டணம் கட்டினால் சிரமம் தவிர்க்கலாம் என கருதி செய்யப்பட்டுள்ளது" என்கிற விளக்கத்தை தந்தார்.
அப்போது அவரிடம் பேசிய நான் வேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரவில்லை என்பதை தெரிவித்ததோடு, எனது பதிவின் நோக்கம் எனக்கானது மட்டும் அல்ல என்பதையும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நாடும் போது அவர்களை பாதிக்கும் இது போன்ற மறைமுக கட்டண உயர்வுகளை தவிர்ப்பது நலம் என்பதையும் தெரிவித்தேன். அவரும் அதனை கவனத்தில் கொள்வதாக தெரிவித்துள்ளதோடு அதற்கு தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்", என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.