திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மொபைல் போன் தடையை விரைவில் அமல்படுத்த இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதிக்கு காத்திருப்பதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் போன் பேசிக்கொண்டு உள்ளார்கள். கருவறைக்கு அருகிலும் சிலர் போன் பேசுவதை அவ்வப்போது பார்க்கமுடிகிறது. இது மற்ற பக்தர்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. மேலும், கோயிலின் புனிதம் இதன்காரணமாக பாதிக்கப்படுகிறது. இதனையடுத்து, அரங்கநாதர் கோயிலில், மொபைல் போன் பயன்படுத்த தடை விரைவில் அமல்படுத்தப்படுவதாக கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி கிடைக்காததால், இதுவரை இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதிக்காக காத்திருப்பதாக கோயில் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உட்புறத்தில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலிலும், இந்த தடை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் லாக்கரில் மொபைல் போன் வைக்க ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஸ்ரீரங்கம் கோயிலிலும் குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.