வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். இது குறித்து தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் இருவரும் பதிவிட்டுள்ளனர்.
அதன்படி, "ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்" என விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், "துணிச்சல் மிக்க ராணி வேலுநாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூருவோம். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீரப் போராட்டத்தை நடத்திய அவர், ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகவும் மக்கள் போராட உந்துசக்தியாக இருந்தார். பெண்களுக்கான அதிகார முக்கியத்துவத்தில் அவரது பங்கு இன்றி அமையாதது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.