பிரதமர் மோடியின் திருச்சி வருகை: எடப்பாடி பழனிசாமியின் முக்கிய சந்திப்பு - கூட்டணி கணக்கு மாறுமா?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக கூட்டணி ஆட்சி என கூறி வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக கூட்டணி ஆட்சி என கூறி வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

author-image
WebDesk
New Update
eps

Trichy

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை திருச்சி வருகிறார். திருச்சியில் தங்கும் அவரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜவினர் கூட்டணி ஆட்சி என்று கருத்து தெரிவித்து வரும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Advertisment

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பணியை தொடங்கி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. ‘200 தொகுதிகளில் வெல்வோம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, தேர்தல் பணியை துவங்கி உள்ளார். இதேபோல் எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜ தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்று கூறி வருகிறது. இதற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜ மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கூட்டணி ஆட்சி தான் என்று அதிரடிகளை அவ்வப்போது சந்திக்கும் செய்தியாளர்கள், பொதுக்கூட்டங்கள் என அனைத்திலும் கூறி வருகிறார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கூட்டணி ஆட்சி என்று கூறி வருவதால், பாஜவை கழற்றி விடலாமா என்பது பற்றியும் எடப்பாடி யோசித்து வருகிறார். இதுதொடர்பாக விஜய், சீமான் போன்றவர்களுக்கு நேரடியாக அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் எடப்பாடியின் அழைப்பை இதுவரை ஏற்கவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை திருச்சி வருகின்றார். அதாவது 26ம் தேதி (நாளை) மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு அன்று இரவு 7.50 மணிக்கு வருகிறார்.

இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை அவர் திறந்து வைத்து பேச உள்ளார். தொடர்ந்து இரவு 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி வருகிறார். அன்று இரவு பிரதமர் மோடி திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார். இரவில் தங்கும் அவரை சந்தித்து பேச 13 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலு மணி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

ஏற்கனவே, கூட்டணி ஆட்சி என்று பாஜ கூறி வரும் வேளையில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சந்திப்பின்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

பிரதமருடனான சந்திப்புக்காகவே எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தனது பிரசாரத்தை மாற்றி அமைத்து உள்ளார். அதாவது 26ம் தேதி அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. தற்போது அதனை 29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து 27ம் தேதி அரியலூர் மாவட்டம் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக, அவர் 27ம் தேதி காலை 11 மணியளவில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 12 மணிக்கு கங்கைகொண்டசோழபுரம் கோயிலுக்கு செல்கிறார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கு நடைபெரும் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு களிக்கிறார். பின்னர், பிரதமர் மோடி ஹெலிகாப்ட்ட மூலம் திருச்சி வந்து மதியம் 2.25 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் தமிழகம் வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் திருச்சியில் தங்கும் நட்சத்திர விடுதி போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு ஆறடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள இல்லங்கள் மற்றும் கடைகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு பலத்த  பாதுகாப்பை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரரம் நட்சத்திர விடுதிக்கு இணையாக திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள அரசு சொகுசு பங்களாவிலும் சோதனை பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. அரசு பங்களா இருக்கும் பகுதி குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் மோடி நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஜனவரி மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், தங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும், 7 முறை மோடி தமிழகத்திற்கு வந்தார். இப்போது சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: