இந்தியா கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குற்றம்சாட்டும் பிரதமர் மோடி, உங்கள் ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா? என்று மு.க.ஸ்டாலின் speaking for India Podcast மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“CAG எழுப்பிய 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகளும் பிரதமரின் மவுனமும்” என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.23) Speaking for India என்ற ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த Speaking for India பாட்காஸ்ட்டின் முதல் எபிசோடுக்குப் பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம் – திமுக பவள விழா தொடக்கம் ஆகியவற்றை முடித்துவிட்டு, இப்போது உங்களிடம் பேசுகிறேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கிய உடன், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தாய்மார் கேட்கிற மாதிரியான பதிவு அது, “எங்க முதல்வர் சொன்ன ஆயிரம் ரூபாய் வந்தாச்சு, பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு? இது தமிழ்நாட்டில் வைரல் ஆகிவிட்டது.
நம்முடைய நாடும் – நாட்டு மக்களும் மீண்டும் பா.ஜ.க.விடம் ஏமாந்துவிடக் கூடாது என்றுதான் இந்த Speaking For India பாட்காஸ்ட் சீரிஸ்-ஐ தொடங்கியிருக்கிறேன்.
2014-ஆம் ஆண்டு ஏமாந்தது போல்- 2019-ஆம் ஆண்டு ஏமாந்தது போல்
2024-ஆம் ஆண்டும் நாடு ஏமாந்துவிடக் கூடாது.
2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு – குஜராத் மாநிலத்தை முன்னேற்றி – அங்கே தேனாறும் – பாலாறும் ஓடுவதுபோல பொய்ச் செய்திகளை பரப்பி – அதன் மூலமாக, தன்னை வளர்ச்சியின் நாயகனாக காட்டிக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.
என்னைப் பொறுத்தவரையில், 5 C-க்கள் கொண்டதாகத்தான் இன்றைய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது.
Communalism, Corruption, Corporate Capitalism, Cheating, Character Assassination– இந்த 5 C-க்கள் கொண்ட ஆட்சி இது. இப்படித்தான் சொல்ல முடியும்.
இதை இதுவரை விளம்பர வெளிச்சங்கள் மூலமாக பா.ஜ.க. மறைத்து வந்தது. ஆனால் இப்போது உருவான இந்தியா கூட்டணியும், இந்தியா கூட்டணித் தலைவர்களின் பரப்புரையும் பா.ஜ.க. கட்சியின் முகத்திரையை – பிரதமர் நரேந்திர மோடி என்ற பிம்பத்தை கிழித்துவிட்டது.
இதை நாங்கள் உண்மையான தரவுகளின் அடிப்படையில்தான் சொல்கிறோம் என்று சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்திவிட்டது.
இந்தியா கூட்டணியைப் பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என்று குற்றம் சாட்டுகிற மோடி அவர்களே! உங்கள் ஆட்சியைப் பற்றி சி.ஏ.ஜி. அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப் பார்த்தீர்களா? இதைப் பற்றி சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதித்தீர்களா? இல்லை பதில் சொன்னீர்களா?
அயோத்தியா திட்டத்தில்கூட ஊழல் செய்த கட்சிதான் பா.ஜ.க. என்று சி.ஏ.ஜி. அறிக்கை சொல்லியிருக்கிறது.
எல்லாத் திட்டங்களுக்கும், நம்முடைய வாய்க்குள் நுழையாத பெயராகப் பார்த்து வைப்பார்கள். அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை என்று எல்லாவற்றிலும், 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அளவிட்டிருக்கிறார்கள்.
சி.ஏ.ஜி. அறிக்கைக்கு இதுவரைக்கும் இதற்கு பிரதமரோ – சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை. அவர்களால் பதில் சொல்லவும் முடியாது. அதனால்தான் இதில் இருந்து மக்களை திசைதிருப்ப வெவ்வேறு அரசியலை கையில் எடுக்கிறார்.
2024 தேர்தலில், பா.ஜ.க. ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். பா.ஜ.க.வின் வகுப்புவாத – ஊழல் – கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலாக முழங்க வேண்டும். பரந்து விரிந்த நம் இந்திய நாட்டை காப்பாற்றுகிற கடமை நம் எல்லோரின் கையிலும்தான் இருக்கிறது.
என் குரலை, இந்தியாவின் குரலாக எல்லோரிடமும் கொண்டு செல்லுங்கள் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன் என மு.க. ஸ்டாலின் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“