modi puducherry visit live : பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 25-ந் தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார்.
தமிழக அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் சென்னை, கேரளா என தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகிறார். அங்கு நடைபெறும் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பு உரையாற்றுகிறார்.
அத்துடன், புதுச்சேரியில் காலை 11.30 மணிக்கு பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, புதுச்சேரியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மடுவுபேட் முதல் ராஜீவ்காந்தி சிக்னல் வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு கோயம்புத்தூரில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணிக்கிறார்.திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் மோடி அர்ப்பணித்து வைக்கிறார்.
மோடி பயணம் விவரம்:
புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பகல் 11.20 க்கு புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடையும் மோடி, காரில் கோரிமேடு ஜிப்மர் கலையரங்கத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்துகொள்கிறார். அப்போது சதானந்தபுரம்-நாகப்பட்டினம் இடையேயான 4 வழிச்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் காரைக்காலில் ரூ.491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதியையும், புதுவை நகராட்சி கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார். அதன் பின்பு. லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடக்கும் பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் முடிந்ததும் பிற்பகல் 1.20 மணிக்கு மோடி புதுவையில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.
புதுவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம், ஜிப்மர் வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.