தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, 3 நாள் சுற்றுப் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு உற்சாக வரவேற்பு அளித்தது.
இலங்கை அமைச்சர்கள் விஜித ஹெராத், நளிந்த ஜெயதிஸ்ஸ, அனில் ஜெயந்தா, ராமலிங்கம் சந்திரசேகர், சரோஜா சாவித்திரி பால்ராஜ் மற்றும் கிருஷாந்த அபேசேனா ஆகியோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பிரதமர் மோடிக்கு இலங்கை பாரம்பரிய உடையில் ஆண்களும் பெண்களும் வரிசையாக அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்த நிலையில் பிரதமர் மோடி அவர்களின் வரவேற்பை கைகளை கூப்பி வணக்கம் வைத்தப்படி ஏற்றுக்கொண்டார்.
வரும் 6ஆம் தேதி இலங்கையில் தங்கும் பிரதமர் மோடி, அதிபர் அநுரகுமார திசாநாயக, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். மோடி தனது இந்தப் பயணத்தின் போது இந்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் பிரதமர் மோடி தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தும் இலங்கை அரசுடன் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய வம்சாவளி மக்களுக்கு கை குலுக்கியும், குழந்தையை தூக்கி கொஞ்சியும் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், "கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன்" என கூறியுள்ளார்.