கங்கைகொண்டசோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு(ஜூலை 26) திருச்சி வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளும் கட்சியான திமுக சார்பில் அமைச்சர் கே என் நேரு, தங்கம் தென்னரசு, மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இது குறித்த விபரம் வருமாறு:- தூத்துக்குடியில் நேற்று இரவு ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு 10 மணிக்கு திருச்சி வந்து சேர்ந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு,அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.காமராஜ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், துரை வைகோ எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/27/modi-visit-2025-07-27-07-44-36.jpg)
பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்ட் மாரியாட் சொகுசு விடுதியில் தங்கினார். இன்று (ஜூலை 27) காலை 11 மணிக்கு கோர்ட்யார்ட் மாரியாட் ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகண்டசோழபுரம் செல்கிறார்.
அங்கு நடைபெறும் ராஜேந்திர சோழன் ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். மீண்டும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பும் பிரதமர் மோடி, திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். முன்னதாக, பிரதமர் மோடி இன்று காலை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/27/modi-visit-2025-07-27-07-44-32.jpg)
இதில் ஏதாவது ஒரு ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி பயணிப்பார் என்று கூறப்படுகிறது. அதேபோல் சொகுசு விடுதியில் இருந்து கிளம்பும் மோடி கன்டோன்மென்ட், ஒத்தக்கடை, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு சோ நடத்துகிறார். இதற்காக காலை 8 மணி முதல் பாஜக பிரமுகர்கள் சாலையின் இருபுறமும் குவிய பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
க.சண்முகவடிவேல்