பாம்பன் புதிய ரயில்வே பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வெளியிட்ட வீடியோவில், முக்கியமான அரசியல் கருத்துகளைத் தெரிவித்தார்.
மதுரை ஆதீனம் கூறியதாவது, "ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்திற்கு மாற்றாக, இப்போது பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு, பிரதமர் மோடிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை தமிழர்களுக்கான முக்கியமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்திருந்தேன். அதனை அடிப்படையாகக் கொண்டு, தமிழக மீனவர்களின் விடுதலையையும், அவர்களின் படகுகளை மீட்டுக் கொணர்ந்ததையும் மோடி அரசு செய்துள்ளது. மேலும், இலங்கை தமிழர்களுக்கான வீடுகள் கட்டும் பணியும் முன்னெடுக்கப்படுகிறது.
கச்சத்தீவு, கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது. அப்போது அதற்கு துணைபோனவர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் இப்போது அவர்கள் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பேசுகிறார்கள்.
எனவே, கச்சத்தீவை மீட்டுத் தருவதுடன், இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திடவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது." என்று மதுரை ஆதீனம் அவரது வீடியோவிலும் கருத்து தெரிவித்துள்ளார்.