சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு இன்று நடைபெற்றது .
மோடி – சீன அதிபர் சந்திப்பு குறித்த லைவ் அப்டேட்ஸ் செய்திக்கு இங்கே க்ளிக் செய்யவும்
சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து இன்று காலை தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சீன அதிபரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர்.
அதன் பிறகு விமான நிலைய பகுதியில் நடந்த கண்கவர் கலை நிகழ்ச்சியை சீன அதிபர் பார்வையிட்டார். சுமார் 10 நிமிடங்கள் சீன அதிபர் அங்கு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.
மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கவிருந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க வருகை தந்த பிரதமர் மோடி, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் வேட்டி சட்டையுடன் தோளில் துண்டு அணிந்த படி மாமல்லபுரம் வந்தடைந்த மோடி. மாமல்லபுரத்தின் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை வரவேற்றார்.
வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டுடன் வருகை தந்த, சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு கைக்குலுக்கி பேசினர். பிறகு, மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு பகுதியில் சிற்பங்களை சீன அதிபருக்கு மோடி விளக்கிக் கொண்டிருக்கிறார்.
வெண்ணெய் உருட்டி பாறையை பார்த்த பிறகு, ஐந்து ரதம் பகுதிக்குச் சென்ற மோடி – ஜின்பிங், நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டனர். அப்போது இரு தலைவர்களும் இளநீர் பருகினர்.
சீன அதிபருக்கு தேனீர் விருந்தும், இரவு விருந்தும் அளிக்கப்படுகிறது.
கலாசேத்ரா குழுவினர் நடத்தும் நாட்டிய நிகழ்ச்சியும், நாடகமும் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தின் வரலாறு, பெருமைகளை விளக்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக சீன அதிபரும், பிரதமரும் அமரும் குண்டு துளைக்காத அரங்குக்கு எதிரில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் கண்ணை கவரும் வகையில் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.